Published : 28 Mar 2019 10:37 AM
Last Updated : 28 Mar 2019 10:37 AM

ராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலை- கரைசேருவாரா நயினார் நாகேந்திரன்?

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் 'உள்ளடி' வேலைகள் தொடங்கியுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சர வையில் தொழில்துறை அமைச் சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தொடர்ந்து அவருக்கு கட்சியில் மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான கருப்பு முருகானந்தத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கட்சியில் சீனியரான கருப்பு முருகானந்தத்துக்கு ராமநாதபுரம் தொகுதியை வாங்கிக் கொடுக்க பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சி செய்தார். ஆனால், பாஜக டெல்லி மேலிடத் தலைவர்கள் தொடர்பு மூலம் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் தொகு தியைத் தட்டிச் சென்றுவிட்டார்.

நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம் தொகுதி அவ்வளவு அறிமுகம் இல்லை. அது மட்டுமின்றி ராமநாதபுரத்தில் அதிமுகவினரிடமே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். இது பாஜகவினருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் அதிமுக போட்டியிடும் நிலை ஏற்பட்டிருந்தால் சிட்டிங் எம்பியான அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கும். அப்படி அளித்தால் அன்வர் ராஜா மீண்டும் தனக்குப் போட்டியாக வரக்கூடும் என உள்ளூர் அமைச்சர் மணிகண்டன் எண்ணியதால் நயினார் நாகேந்திரனை உசுப்பேற்றி ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க வைத்ததாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தில் உள்ள அமைச்சர் மணிகண்டனின் இல்லத்தில்தான் தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பையும் நயினார் நாகேந்திரன் நடத்தினார்.

சீட்டுக்காக அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் மூலம் காய் நகர்த்திய அதிமுக மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பலரும் விரக்தியடைந்துள்ளது மட்டுமின்றி தொகுதிக்கும் கட்சிக்கும் புதியவரான நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தரப்பில் இருந்தும் பெரிய அளவில் ஒத்துழைப்புக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக உள்ளடி வேலைகள் தீவிரமடைந் துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதிமுகவில் இருக்கும்போதே இதைவிட பல `உள்ளடி' வேலைகளை, தான் எதிர்கொண்டுள்ளதாகவும் இவற்றையெல்லாம் சமாளித்து ராமநாதபுரத்தில் வெல்வேன் என நயினார் நாகேந்திரன் சவால் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x