Published : 17 Mar 2019 08:15 PM
Last Updated : 17 Mar 2019 08:15 PM

மத்திய, மாநில ஆட்சிகளின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்; அப்புறப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி

“நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும் – மத்திய மாநில அரசுகளை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கூறும்போது, தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும் இருக்கும், கதாநாயகியாகவும் இருக்கும் – நிச்சயம் வில்லனாக இருக்காது” என்றார்.

 

இன்று, 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகள் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிற்பாடு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

 

இது குறித்த விவரம் வருமாறு:

 

செய்தியாளர்: தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத முதல் தேர்தல். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்? சில தொகுதிகளில் தி.மு.க அதிமுகவோடும், பா.ம.கவோடும் தனியாக போட்டியிடுகின்றது. இதை எப்படி பார்க்கின்றீர்கள்?

 

ஸ்டால்லின்: தி.மு.க தனியாக போட்டியிடுகிறது என்று நான் சொல்ல விரும்பவில்லை. 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்த அணிகள் போட்டியிடுகின்றன. இன்றைக்கு எல்லாத் தொகுதிகளிலும் இருக்கக்கூடிய மக்கள் இந்த ஆட்சியின் மீது எந்தளவிற்கு வெறுப்பாக இருக்கின்றார்கள், எந்தளவிற்கு இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று கருதிக்கொண்டு இருக்கின்றார்கள். அது மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார்கள். எனவே, அந்த கோணத்தோடுதான் பார்க்கின்றோம். இதில் தி.மு.க எத்தனை தொகுதிகளில் நிற்கிறது? காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் நிற்கின்றது? யாரை எதிர்த்து போட்டியிடுகின்றோம் என்பது பிரச்னையில்லை.

 

செய்தியாளர்: தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த வரையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முறை வெறும் 2 மகளிர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதைப் பற்றிய தங்கள் கருத்து?

 

ஸ்டாலின்: 20 தொகுதிகளுக்கு 2 பெண் வேட்பாளர்களை நிறுத்துகின்றோம். தலைவர் எந்த முறையை கையாண்டு இருக்கின்றாரோ அதே முறையைத் தான் கையாண்டு இருக்கின்றோம்.

 

செய்தியாளர்: தலைவர் கலைஞர் இல்லாத தி.மு.கழகம் முதல் தேர்தலை சந்திக்கின்றது. அதை நீங்கள் பலவீனமாக பார்க்கின்றீர்களா? எப்படி உணர்கின்றீர்கள்?

 

ஸ்டாலின்: நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள். அதைச் சொல்லுங்கள்.

 

செய்தியாளர்: தேர்தல் பிரச்சாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?

 

ஸ்டாலின்: 19 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்குகிறது. அன்றிலிருந்து நாங்களும் தொடங்குகின்றோம்.

 

செய்தியாளர்: தி.மு.க வின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் அறிவிப்பார். உங்கள் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

 

ஸ்டாலின்: தி.மு.க தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும் இருக்கும், கதாநாயகியாகவும் இருக்கும். வில்லனாக இருக்காது.

 

செய்தியாளர்: தேர்தலில் உங்களுடைய பிரச்சார மைய கருத்து என்னவாக இருக்கும்?

 

ஸ்டாலின்: மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று நாங்கள் எங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்திருக்கிறோம். அதனை வைத்தே நீங்கள் எங்கள் மைய கருத்தை தெரிந்து கொள்ளலாம்.

 

செய்தியாளர்: மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வீர்கள்?

 

ஸ்டாலின்: அதெல்லாம் தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம். தமிழ்நாட்டில் நாங்கள் 40 க்கு 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாருங்கள்.

 

செய்தியாளர்: எல்லாக் கட்சிகளிலும் பெரும்பாலான செல்வந்தர்களே வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். சாமானியர்கள் போட்டியிட முடியாதா?

 

ஸ்டாலின்: அது உங்களுடைய எண்ணம். எங்களைப் பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, தகுதி, கட்சிக்கு அவர்கள் ஆற்றியிருக்கின்ற பணிகளின் அடிப்படையிலே தேர்வு செய்திருக்கிறோம்.

 

செய்தியாளர்: தேர்தல் பிரச்சாரங்களை எப்போது தொடங்குவீர்கள்?

 

ஸ்டாலின்: தலைவர் கலைஞர் அவர்களின் திருவாரூர் தொகுதியில் வருகிற 20 ஆம் தேதி தொடங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

 

செய்தியாளர்: தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

 

ஸ்டாலின்: வருகிற 19ம் தேதி வெளியிடப்படும்.

 

செய்தியாளர்: தேர்தல் ஆணையம் சுயமாக செயல்படுகிறது என நினைக்கிறீர்களா?

 

ஸ்டாலின்: தேர்தல் ஆணையம் சுயமாக செயல்பட வேண்டுமென்பது தான் எங்கள் விருப்பம். அதற்காகத்தான் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x