சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்: நீண்ட இழுபறிக்குப் பின் அறிவிப்பு

சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்: நீண்ட இழுபறிக்குப் பின் அறிவிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் நீண்ட இழுபறிக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்தகே.எஸ்.அழகிரி, ‘‘தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும்’’ என்றார். அவர் இப்படி கூறிய சில மணி நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது டெல்லி காங்கிரஸ் தலைமை. அந்தப் பட்டியலில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இல்லை.

ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகனான டாக்டர் அருண் பெயரும் வேட்பாளர் பட்டியலுக்கான பரிசீலனையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் இதை அறிவித்தார்.

ப.சிதம்பரம் தன் மகன் கார்த்திக்காக அதிகம் மெனக்கெடலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில் அது உறுதியாகியுள்ளது.

பாஜக சார்பில் எச்.ராஜா இதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in