அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
நியாயமான முறையில் தேர்தல் நடக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் 10 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும் என டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பட்டியலுடன் தேர்தல் ஆணையத்திடம் திமுக அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனுடன் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் தேர்தலை நியாயமாகவும், பாரபட்சமின்றி வெளிப்படையாக நடத்தவேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு அப்படி நடத்தப்பட குறிப்பிட்ட உயர் பதவியில் உள்ள 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனவும் பட்டியலுடன் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை திமுக சார்பில் அதன் சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இன்று வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
“தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதி அமலுக்கு வந்துள்ளது. நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முறையாக நடக்க மாற்றப்படவேண்டும் என்கிற அடிப்படையில் சில உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, ஆளுங்கட்சி தேர்தலில் வெல்ல தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவர்களை அதே இடத்தில் தொடர அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை, அதிகாரத்தை ஆளும் அரசுக்கு ஆதரவாக நடைபெறுகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.
ஆகவே, கீழ்கண்ட பட்டியலில் உள்ள காவல் அதிகாரிகள் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாகவும், பாரபட்சமாகவும் தேர்தலில் நடக்க வாய்ப்புள்ளது. கீழ்க்கண்ட அதிகாரிகளை அவரவர் வகித்துவரும் பதவியில் செயல்பட அனுமதித்தால் அது நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடப்பதை பாதிக்கும்.
ஆகவே மேற்கண்ட நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக கீழ்கண்ட அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிடவேண்டும்”
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
திமுக மனுவுடன் இணைத்து அளிக்கப்பட்ட பட்டியலில் உளள பெயர்கள்
* டி.கே.ராஜேந்திரன், டிஜிபி சட்டம் ஒழுங்கு
* சத்தியமூர்த்தி, ஐஜி உளவுப்பிரிவு
* ஈஸ்வரமூர்த்தி, ஐஜி உள்நாட்டு பாதுகாப்பு
* டி.கண்ணன், எஸ்பி எஸ்.எஸ்.பி
* திருநாவுக்கரசு, துணை ஆணையர்- 2 நுண்ணறிவுப்பிரிவு
* விமலா, துணை ஆணையர்-1 நுண்ணறிவுப்பிரிவு
* நாகராஜன், வடக்கு மண்டல ஐஜி
* வரதராஜு, மத்திய மண்டல ஐஜி
* பெரியய்யா, மேற்கு மண்டல ஐஜி
* கே.ராஜேந்திரன், கூடுதல் எஸ்பி உளவுப்பிரிவு
