Last Updated : 20 Mar, 2019 11:15 AM

 

Published : 20 Mar 2019 11:15 AM
Last Updated : 20 Mar 2019 11:15 AM

மேற்கு மண்டல மாவட்டங்களில் விபத்துகளை குறைக்க தீவிர முயற்சி!

நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகளில் முக்கியமானது சாலை வசதி. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகள் என மக்கள் பயணிக்கும் சாலைகள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 1.52 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைந்துள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் 4,873 கிலோமீட்டர், மாநில நெடுஞ்சாலைகள் 10,549 கிலோமீட்டர்,  முதன்மைச்  சாலைகள் 11,315 கிலோமீட்டர், மாவட்ட இதர சாலைகள் மற்றும் திட்ட சாலைகள் 34,937 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களை இணைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலையும், இரு மாவட்டங்களையும், மாவட்டங்களின் தலைநகரையும் இணைப்பதில் மாநில நெடுஞ்சாலையும் முக்கியப் பங்காற்றுகின்றன. சுற்றுலா, வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துவதிலும் சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் கடல் மற்றும் வான்வெளி சார்ந்த போக்குவரத்தைக் காட்டிலும், சாலை போக்குவரத்தே மிக அதிகம்.  விபத்துகளும், உயிரிழப்பும் இல்லாத போக்குவரத்துக்கு,  உரிய கட்டமைப்பு வசதிகளுடன் சாலைகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய தொழில் நகரம் கோவை. கல்வி,  தொழில், மருத்துவம் என பல துறைகளில் சிறந்து விளங்குவதால், தமிழகம் மட்டுமின்றி, வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கோவையை நாடி வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதேசமயம், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே?

நகரில் ஒருசில சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ, அதேபோலத்தான் தற்போதும் உள்ளன. குறிப்பாக, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் சாலை, நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும். சாலைகளை விரிவாக்கம் செய்யப்படாததால்,  போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

8 மாவட்டங்கள்...

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள்

அமைந்துள்ளன.  தமிழகத்தின் மற்ற மண்டலங்களைக் காட்டிலும், மேற்கு மண்டலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முக்கியமான  நகரங்கள், சுற்றுலா தலங்கள், வர்த்தக மையங்கள் போன்றவை இந்த மாவட்டங்களில் அதிகம். அதேசமயம், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடும் நடவடிக்கை தேவை!

இது தொடர்பாக `கன்ஸ்யூமர் வாய்ஸ்’  அமைப்பு செயலர்  நா.லோகு கூறும்போது, “சாலை விதிகளை மீறுவது,  மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, முகப்பு விளக்கை அதிமாக ஒளிரச் செய்வது உள்ளிட் காரணங்களால் விபத்துகள் நேரிடுகின்றன.  பகல் நேரத்தைக் காட்டிலும், இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நேரிடுகின்றன. விபத்துகளைத் தடுக்க போலீஸார் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வழிப் பாதையில் விதிமீறிச் செல்வோர், அனுமதிக்கப்படாத சாலைகளில் வாகனங்களை ஓட்டுநவோர், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் வாகனங்களை ஓட்டுவோர்  மீது போக்குவரத்து போலீஸார் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை.

ஓரிடத்தில் நின்றுகொண்டு, அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளைப் பிடித்து, அபராதம் வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.

ஆட்சியர் தலைமையிலான சாலை பாதுகாப்புக்  குழுக் கூட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் நடத்தவேயில்லை. எச்சரிக்கை கருவிகள் வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சாலை பாதுகாப்புக் குழுவுக்கு ஒதுக்கப்படும் நிதியையும்  முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பைபாஸ் சாலைகள், வேகத்தடை பகுதிகளில் எச்சரிக்கை கருவிகள் வைக்கப்படுவதில்லை.  பல வாகனங்களில் விதிகளை மீறி, அதிக வெளிச்சம் ஒளிரும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். இதனால், எதிரே வரும் வாகன ஓட்டுநர்களின் கண்கள் கூசி, விபத்துகள் நேரிடுகின்றன. இதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம்,  சாலை விதிகளை மீறுவோரைக கண்டறிந்து, அபராதம் விதிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால்,  இது முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.  சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

விபத்துகளை தடுக்க நடவடிக்கை!

மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா கூறும்போது, “மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகளைத் தடுக்க,  காவல் துறை  சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 அதிக விபத்துகள் நேரிடும் இடங்களைக் கண்டறிந்து, `பிளாக் ஸ்பாட்’  எனக் குறிப்பிட்டு, வேகத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன. இரவு முதல் அதிகாலை வரை செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மாவட்ட எல்லைப் பகுதியில் அதிகாலை வரும் பேருந்துகள்  நிறுத்தப்பட்டு, பேருந்து ஓட்டுநரிடம் பேச்சுகொடுத்து, அவரது அசதியைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

`தூக்க கலக்கமாக இருந்தால், முகத்தை தண்ணீரால் கழுவிவிட்டு வாகனத்தை ஓட்டுங்கள்.  இத்தனை பயணிகளை பத்திரமாக கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது’ என்று பேருந்து ஓட்டுநரிடம் காவல் துறையினர் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

நீலகிரி மலைப்பாதையில் சில இடங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சாலை விதிகள் தொடர்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாகனங்களின் முகப்பு விளக்கை பயன்படுத்தும் விதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல, விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்ந்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய,  வட்டாரப்  போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.  காவல் துறையினர் எடுத்து வரும் நடவடிக்கையால், மேற்கு மண்டல மாவட்டங்களில் சாலை விபத்துகள்  குறைந்துள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x