Published : 19 Mar 2019 05:45 PM
Last Updated : 19 Mar 2019 05:45 PM

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விபரீதம்: நீதிபதி எதிரில் மனைவியைக் கொல்ல முயன்ற கணவர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் மனைவி மேல் கோபம் கொண்ட கணவர் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45). சென்னை போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்போது சரவணன் தனது மனைவியைத் தாக்கி காயம் ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு வரலட்சுமி கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த பத்தாண்டுகளாக நடந்த வழக்கில் இன்று நீதிபதி கலைவாணன் முன் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் கணவர் சரவணன், மனைவி வரலட்சுமி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது நீதிபதி எதிரிலேயே கணவர் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியைக் குத்த முயன்றார். இதில் வரலட்சுமிக்கு கழுத்து அருகே வெட்டு விழுந்தது. இதனால் நீதிமன்றமே பரபரப்பானது.

உடனே அங்கிருந்த வழக்கறிஞர்கள் சரவணனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் உயர் நீதிமன்ற போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வரலட்சுமி ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

உயர் நீதிமன்றம் முழுவதும் சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பில் இருந்தாலும் குடும்ப நல நீதிமன்றம் சென்னை போலீஸ் பாதுகாப்பில் வருகிறது. காவலில் போலீஸார் காட்டும் அலட்சியம் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி ஏதாவது சம்பவம் நிகழ்கிறது என வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞரை அவரது மகனே கத்தியால் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டார். சமீபத்தில் போலி சிபிஐ அதிகாரி கார் உள்ளே கண்டபடி வந்ததில் வழக்கறிஞர் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

நேற்று முகிலன் குடும்பத்தார் ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியூரிலிருந்து வந்தபோது அவர்களை அனுமதிக்காமல் கடுமை காட்டிய போலீஸார் இன்று கத்தியுடன் வந்தவரைச் சோதிக்காமல் அனுப்பும் அளவுக்குத்தான் பாதுகாப்பு உள்ளது என சில வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி ரகுமான் காவல் உதவி ஆணையர் சரவணனை அழைத்து பாதுகாப்பு குறித்து சில அறிவுறுத்தல்களை அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x