Last Updated : 13 Mar, 2019 02:38 PM

 

Published : 13 Mar 2019 02:38 PM
Last Updated : 13 Mar 2019 02:38 PM

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 29.90 அடியானது: 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - மதகு மாற்றியமைக்கும் பணி விரைவில் தொடங்க வாய்ப்பு

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 29.90 அடியாக சரிந்துள்ள நிலையில் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி உடைந்தது. இதையடுத்து அணையில் இருந்து 1.40 டிஎம்சி நீர் வீணாக ஆற்றில் வெளியேறியது. அணையின் 8 மதகுகள் மாற்றிமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனிடையே ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக ஒரு மதகு பொருத்தப்பட்டது. 42 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர், 7 மதகுகள் மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர். மத்திய நீர் வளத்துறை அலுவலர்களும் அணையில் ஆய்வுகள் மேற்கொண்டனர். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, வறட்சியால் நீர்மட்டம் சரிந்துள்ளதால், 2-ம் போக சாகுபடிக்கு மேலும் ஒரு மாதம் தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, பருவமழை பொய்த்ததால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. இதனால் 2-ம் போக சாகுபடிக்கு நெல் நடவு செய்த விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் வேதனையடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை கெலவரப்பள்ளி அணையில் இருந்து 480 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 20 நாட்களாக 200 கன அடி தான் திறந்துவிடுகின்றனர். இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், இன்னும் 30 நாட்களுக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் கூறும் போது, 2-ம் போக பாசனத்துக்கு அணையின் மூலம் மார்ச் 10-ம் தேதி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், நெற்பயிர்களைக் காக்க, தென்பெண்ணை ஆற்றில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய்கள் மூலம் தண்ணீர் 160 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வரும் தண்ணீருடன், ஏற்கெனவே இருப்பு உள்ள தண்ணீரும் சேர்த்து திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 29.80 அடியாக உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் மதகுகள் மாற்றியமைக்கும் பணிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மதகுகள் மாற்றியமைக்கும் பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கும், என்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x