Published : 28 Mar 2019 11:03 AM
Last Updated : 28 Mar 2019 11:03 AM

தேனியில் ஆரூண் ஆதரவாளர்களுக்கு ’வலைவீசும் அதிமுக

வாக்கு இழப்புகளை சரிக்கட்ட காங்கிரஸில் ஆரூண் ஆதரவாளர்களை வளைக்கும் முயற்சியில் அதிமுக. ஈடுபட்டுள்ளது. அதே சமயம் அதிருப்தியைக் களைந்து வாக்குகளைக் கவரும் முயற்சிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸை வலுப்படுத்தியவர்களில் ஆரூண்ரஷீத் முக்கியமானவர். இத்தொகுதியை அதிமுக பலமாய் பிடித்து வைத்திருந்த காலகட்டத்தில் சென்னையில் இருந்து வந்து இங்கு களம் இறங்கியவர் இவர்.

இத்தொகுதியில் இஸ்லாமியர்கள் ஓட்டு பரவலாக உள்ளது. சிறுபான்மையினர் என்பதால் இவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் இவருக்குக் கிடைத்தது. வளமான பொருளாதாரமும் இருந்ததால் அதிமுகவுக்கு நிகராகக் களமாட முடிந்தது.

போதாக்குறைக்கு கூட்டணிக் கட்சிகளின் உழைப்பு, ஆட்சி மீதான அதிருப்தி ஆகியவையும் சேர்ந்து கொள்ள 2004-ல் முதல்முதலாக இங்கு எம்பி.யானார். தொடர்ந்து 2009 தேர்தலில் இவரே எம்பியானார்.

இத்தொகுதியைப் பொறுத்த அளவில் 1962-ல் காங்கிரஸ் வேட்பாளர் மலைச்சாமி எம்பி.யாக இருந்தார். அதன்பின் அதிமுக, திமுக என்று மாறிமாறி தொகுதியை தக்கவைத்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கைப்பற்றியது.

கடந்த தேர்தலில் திமுக, மதிமுக, காங்கிரஸ் என்று தனித்தனியாகப் போட்டி இருந்ததால் அதிமுக வெற்றி பெற்றது. நடைபெற உள்ள தேர்தலில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது முதலே வேட்பாளராக ஹாரூணே அறிவிக்கப்படுவார் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு கட்சி உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி இருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி கட்சியின் பல்வேறு கூட்டங்கள், செயல்பாடுகளில் இவரது ‘பங்களிப்பு’ அதிகம் இருந்தது.

ஆனால் சில மாதங்களாகவே இவர் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். தேர்தல் நெருங்கிய நேரத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் ஆரூண்தான் வேட்பாளர் என்று பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் உடல்நலக் குறைவால் ஆர்வம் இன்றியே இருந்துள்ளார். தனது மகன் ஹசனை இத்தொகுதியில் களமிறக்க நினைத்தார். ஆனால் கட்சி மேலிடம் இதற்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொகு திக்காக முனைப்பு காட்டவே அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது ஆரூண் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்தான் வேட்பாளர் என்று பூத் கமிட்டி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று அனைத்துப் பணிகளையும் இவர்கள் முடித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் தங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆரூண் வேட்பாளர் இல்லை என்ற செய்தி அதிமுகவுக்கு ஆறுதலாக இருந்தாலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளர் என்ற தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர், பாரம்பரிய குடும்பம், அரசியல் அனுபவம், பேச்சுத் திறமை உள்ளிட்டவை நடுநிலையான வாக்காளர்களை ஈர்த்து விடுமோ என அதிமுகவுக்கு அச்சம் ஏற்பட்டது.

எனவே, மக்களிடம் இந்த மனோநிலையை மாற்றும் விதமாக வெளியூர்க்காரர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது. தொடர்ந்து, தேனி காங்கிரஸிலேயே கோஷ்டிப் பூசல் உண்டு. ஆரூண் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே கட்சிக்காரர்களே அவருக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என்றும் தெரிவித்து வருகிறது அதிமுக.

இந்நிலையில், ஆரூண் ஆதரவாளர்களின் ஆதங் கத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது. இதற்காக மறைமுக சந்திப்பு களைத் தொடங்கி உள்ளது. தேர்தல் பணியில் வேகம் காட்ட வேண்டாம். தங்களுக்குச் சார்பான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று அதிமுக ‘பொருளாதார சந்திப்புகளை’ நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

எங்களுக்கு பலம்தான்

இது குறித்து காங்கிரஸ் தரப்பினர் கூறியதாவது: வேட்பாளர் பெயர் மாறியபோது ஆரம்பத்தில் வருத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கட்சி உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதுதான் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அழகு. தற்போதைய வேட்பாளர் அரசியலில் பாரம்பரியம் மிக்கவர். இது எங்களுக்கு பலம்தான்.

எனவே சிறிய வருத்தங்களை மறந்து களப்பணி ஆற்றி வருகிறோம். இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸில் உள்ளவர்கள் கட்சிப் பற்றுள்ளவர்கள். எதற்காகவும் எதிர் அணியினரின் பிடிக்குள் சிக்க மாட்டோம். தோல்வி பயத்தில் இப்படி ஒரு தகவலை பரப்பி வருகின்றனர் என்றனர்.

தொண்டர்கள் சிலர் கூறுகையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனைப் பொறுத்தளவில் டெல்லி வரை தொடர்புடையவர். செல்வாக்கு உடையவர். இவரை வெற்றி பெற வைத்து நல்ல பெயர் வாங்கினால் தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் என்ற நோக்கிலும் பல நிர்வாகிகள் மனம்மாறி களப்பணியில் மும்முரமாகி உள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x