

காமராஜரை காங்கிரஸ் எப்படி அவமானப்படுத்தியது என்பதை தமிழகம் மறக்காது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சி என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கியபோது அவரை மீட்டோம். அபிநந்தன் 2 நாட்களில் மீட்டோம் என்பது உலகுக்கே தெரியும். 1900 மீனவர்களை மீ்ட்டுள்ளோம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுள்ளோம். சவுதி இளவரசருடன் பேசி 800 பேரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.
வலிமையான மாநில தலைவர்களை அவமானப்படுத்துவது காங்கிரஸூக்கு வாடிக்கை. காமராஜரை காங்கிரஸ் எப்படி அவமானப்படுத்தியது என்பதை தமிழகம் மறக்காது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியலுக்காக மாநில அரசுகளை கலைப்பது காங்கிரஸின் வாடிக்கை. திமுக ஆட்சியையைம் கூட காங்கிரஸ் கலைத்து இருக்கிறது. ஆனால் அதைபற்றி கவலைப்படாமல் அதே காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது.
ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது. எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார்? அவர்களது நோக்கம் என்ன? திட்டம் என்ன? என்பதை மக்கள் கேட்க வேண்டும். உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே, நாற்பதும் நமதே.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.