வேளச்சேரியில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை: பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் வெறிச்செயல்

வேளச்சேரியில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை: பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் வெறிச்செயல்
Updated on
2 min read

சென்னை வேளச்சேரியில் மகளைக் கட்டித்தர மறுத்த தாயை வினோத் என்ற இளைஞர் நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4-வது தெருவில் வசித்தவர் ரேவதி (45). இவரது கணவர் ராமச்சந்திரன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார். கணவர் மரணத்துக்குப் பின் ரேவதி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில் ரேவதி நேற்றிரவு வழக்கமாக பணி முடிந்து  8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி செக்போஸ்ட் வண்டிக்காரன் தெரு அருகே அவரை இடைமறித்த இருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம்பட்ட ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் கிண்டி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரேவதியிடம் தகராறு செய்து அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்தது.

அந்த இளைஞர் ரேவதியின் மகளை மணக்க இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர் வினோத் எனத் தெரியவந்தது. தன்னைத் தேடுவதை அறிந்த வினோத் நள்ளிரவில் போலீஸில் சரணடைந்தார்.  

ரேவதிக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் ரேவதியின் மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார். தெரிந்தவர்கள் மூலம் கிண்டி மசூதி காலனியில் வசிக்கும் வினோத் (32) என்பவரைப் பார்த்து பிடித்துப் போக, பெரியவர்கள் பேசி கடந்த ஆண்டு நிச்சயம் செய்தனர்.

வினோத் கார் ஓட்டுநராக உள்ளார். நிச்சயத்துக்குப் பின் வினோத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாகத் தெரியவந்தன. மது, போதை, ரேஸ் கார் ஓட்டுவது ஆகியவற்றில் வினோத் ஈடுபட்டு வந்ததும், சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதையும் அறிந்த ரேவதி தனது மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் ரேவதி வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்த ரேவதிக்கு தொடர்ந்து வினோத் தொல்லை கொடுத்ததால் கிண்டி போலீஸில் புகாரும் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வினோத்தை அழைத்து எச்சரித்தும் அனுப்பினர்.

வினோத்தின் தொல்லை தாங்காமல் தனது மகளை உறவினர் இல்லத்தில் தங்க வைத்தார் ரேவதி. இதனால் வினோத்துக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தனது நண்பருடன்  ரேவதியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வினோத், ''உன் மகளை எனக்குக் கட்டிவைக்க வேண்டும்'' என மிரட்டியுள்ளார்.

''உன் நடத்தை சரியில்லை, உனக்குக் கட்டிவைக்க வேண்டும் என சட்டம் எதுவும் உள்ளதா? ஏற்கெனவே போலீஸில் புகார் உள்ளது. மிரட்டினால் மீண்டும் புகார் அளிப்பேன்'' என எச்சரித்துள்ளார் ரேவதி.

இதனால் ஆவேசப்பட்ட வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரேவதியைச் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்துள்ளார்.

ரேவதியை வெட்டிவிட்டு நண்பனுடன் சேர்ந்து தப்பிச் சென்ற வினோத் பின்னர் போலீஸில் சரணடைந்தார். அவரது நண்பர் சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in