Published : 28 Mar 2019 10:57 AM
Last Updated : 28 Mar 2019 10:57 AM

இடம் மாறினாலும் தடம் மாறவில்லை: புதுவை பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு

திமுக கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நாஞ்சில் சம்பத். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தவளக்குப்பம் கிராமத்தில் நேற்று நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்தை தொடங்கினார்.

மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்தது குறித்து, அப்போது நாஞ்சில் சம்பத் கூறியது: கட்சி அரசியலில் இருந்து விலகி, கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால், நான் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன்.ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோடி ஊழல் செய்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்படுத்திவிட்டார். மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகி விட்டனர். புதுச்சேரியில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருகிறார். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "இந்தத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் இரண்டாவது இடத்தையும் அதிமுக மூன்றாவது இடத்தையும் பெறும்" என்றார்.

இந்த முறை திமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, "நான் மட்டுமே கொள்கையுள்ள அரசியல்வாதி, 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையை பேசி வருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான்தான்" என்றார். 'கருத்துக் கணிப்பில் பாஜக வெல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளதே!' என்று கேட்டதற்கு, "கருத்துக் கணிப்பில் பாஜக வெல்லும் என்பது மாயப் பிரச்சாரம். அதற்கு யாரும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. பாஜக அத்தியாயம் முடிவுறுகிறது என்பதற்கு 3 மாநிலத் தேர்தல்களே சாட்சி. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் வென்று ராகுல் பிரதமராவார். மோடி நாட்டை விட்டு தப்ப பார்ப்பார். தப்ப விடமாட்டோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x