Published : 13 Mar 2019 10:48 AM
Last Updated : 13 Mar 2019 10:48 AM

உதகை நகரில் புகுந்த கரடி: பீதியில் உறைந்த மக்கள்; கரடியைப் பிடிக்க வனத்துறையினர் ஆயத்தம்

உதகை நகரின் மையப்பகுதியான தினசரி சந்தை அருகே கரடி புகுந்ததால் குடியிருப்புவாசிகள் பீதியில் உறைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் குடியிருப்பு அருகிலேயே அவை வலம் வர ஆரம்பித்து விட்டன. இன்று (புதன்கிழமை) அதிகாலை உதகை நகருக்குள் புகுந்த கரடி ஒன்று, நகரின் மையப்பகுதியான தினசரி சந்தை அருகேயுள்ள குடியிருப்புகளில் உலா வந்தது. உதகை கணபதி தியேட்டர் செல்லும் எம்.எஸ்.லைன் பகுதியில் நடமாடிய கரடியைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் மெல்ல அதிகரிக்க, அப்பகுதியில் பாலாஜி என்பவர் வீட்டின் கேட் மீது ஏறி, வீட்டின் பக்கவாட்டில் உள்ள சந்தில் புகுந்தது.

அந்த சந்திலிருந்து வெளியேற முடியாமல் கரடி தவித்தது. கரடி சிக்கிக்கொண்ட பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதாலும், காலை நேரம் என்பதாலும் அலுவலகம் மற்றும் பள்ளி மாணவர்கள், கரடி நடமாடத்தால் வீடுகளிலேயே முடங்கினர். மேலும், மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

இந்நிலையில், கரடி நடமாட்டம் குறித்த செய்தி பரவியதும், எம்.எஸ்.லைன் பகுதியில் மக்கள் குவிந்தனர். பாலாஜி வனத்துறை மற்றும் காவல்துறைக்கு கரடி குறித்து தகவல் அளித்தார். தகவலின் பேரில் வனவர் பரமேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து கரடி நடமாட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

நேரமாக மக்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால், பி1 போலீஸார் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். வடக்கு சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் கரடியை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். இதனால், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். கரடியைப் பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x