Last Updated : 30 Mar, 2019 08:57 AM

 

Published : 30 Mar 2019 08:57 AM
Last Updated : 30 Mar 2019 08:57 AM

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு: குற்றவாளிகளை கண்டறிவதில் திணறல்? - சிபிஐ விசாரணைக்கு ஏற்று ஒன்றரை ஆண்டுகளாகியும் பலனில்லை

கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்டு நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்து, சிபிசிஐடியிடமிருந்து வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலைப் பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இவ்வழக்கு கடந்த 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 7.11.2017-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர், ராமஜெயத்தின் நண்பர்கள், சந்தேக நபர்கள், பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. இதுகுறித்து கே.என்.நேரு தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் கூறியபோது, "ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்தனர். 300-க்கும் மேற்பட்டவர்களிடம் எழுத்துபூர்வமாக சிலவற்றை எழுதி வாங்கினர்.

சுமார் 5 ஆண்டுகள் விசாரணை நடத்திய நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 8 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களும் கடைசிவரை குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ ஆரம்பத்தில் இருந்து விசாரணையைத் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எங்களால் முடிந்தவரை சட்ட ரீதியாக முயற்சித்து விட்டோம். ஒவ்வொரு முறையும் விசாரணை அமைப்புகள் மாறுகின்றனவே தவிர, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x