Last Updated : 04 Mar, 2019 08:10 AM

 

Published : 04 Mar 2019 08:10 AM
Last Updated : 04 Mar 2019 08:10 AM

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்த மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை அறிமுகம்

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும்கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியங்களை, காப்பீடுதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என இரண்டு வகையான பாலிஸிகளை விற்பனை செய்து வருகிறது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிஸி 1894-ம் ஆண்டும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995-ம் ஆண்டும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியத்தை ஆன்லைன் மூலம் செலுத்த மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை அஞ்சல் துறை விற்பனை செய்து வருகிறது. தொடக்கத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிஸியை அரசு ஊழியர்கள் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சில தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் எடுக்க அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள், துணை ராணுவப் படையினர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், பட்டயக் கணக்காளர்கள், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் அஞ்சல் ஆயுள் காப்பீட்டை எடுக்கலாம்.

அதே சமயம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனையாக காப்பீடுதாரர்களுக்கு கிராமப்புறத்தில் வீட்டு முகவரி இருக்க வேண்டும். மேலும், அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான பிரீமியத்தை அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்தே மாதம்தோறும் பிடித்தம் செய்து கட்டும் வசதி உள்ளது. ஆனால், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் தங்களது பிரீமியத்தை அஞ்சல் நிலையங்களில் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பிரீமியம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடு முழுவதும் 34,707 காப்பீடுகளுக்கான பிரீமியம் மட்டுமே ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பிரீமியம் செலுத்துவதை அதிகரிப்பதற்காக ஆன்லைன் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. https://pli.indiapost.gov.in/CustomerPortal/PSLogin.jsp என்ற லிங்கில் சென்று காப்பீடுதாரர்கள் தங்களுக்கென ஒரு ஐடி-யை உருவாக்க வேண்டும். இதற்காக, காப்பீடுதாரர் தனது மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை அருகில் உள்ள அஞ்சல்நிலையத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

இ-மெயிலில் ரசீது

இந்த ஆன்லைன் சேவை வசதியை பயன்படுத்தி காப்பீடுதாரர்கள் தங்களது பிரீமியத் தொகையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செலுத்தலாம். இதற்காக, அஞ்சலகங்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய உடன் அதற்கான ரசீது இ-மெயிலில் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், பாலிஸியின் தற்போதைய நிலை, இதுவரை செலுத்தப்பட்ட பிரீமியத் தொகை (ஜிஎஸ்டி வரி உட்பட), பாலிசி மீதான கடன் பெறும் வசதி, காப்பீட்டை திரும்ப ஒப்படைத்தல் (சரண்டர் செய்தல்), முதிர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பிரீமியம் செலுத்துவதன் மூலம் காப்பீடுதாரர்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சமாகும்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x