

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் தொகையை சில்லறையாகக் கொடுத்தார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர்.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில வேட்பாளர்கள் நூதனமாக எதையாவது செய்வார்கள், அந்த வகையில் இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஒருவர் தனது டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார்.
குப்பல்ஜி தேவதாஸ் என்னும் அந்த வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார்.
சுயேச்சை வேட்பாளர்கள் பற்றிய சுவையான ஆய்வு ஒன்று உண்டு. 2013 முதல் 2018 வரை 65% சுயேச்சை வேட்பாளர்கள் மைய நீரோட்டக் கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளார்கள், இவர்கள் நிற்கும்போது ‘அனைவரும் நேர்மையற்றவர்கள்’ ‘நான் நேர்மையானவன்’ என்று நிற்பார்கள். சந்தர்பவசத்தால் வெற்றி பெற்று விட்டால் இவர்கள் எந்தக் கட்சிகளை விமர்சித்தாரோ அந்தக் கட்சியில் ஒன்றையே ஆதரிக்கத் தேர்வு செய்வார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இன்னொரு உதாரணம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன், கடந்த தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு வரும் இவர், இம்முறை தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவருடைய இருநூறாவது வேட்புமனு தாக்கல் என்பதும் இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஒரு முறை நரசிம்மராவை எதிர்த்து வேட்புமனுத்தாக்கல் செய்தபோது தான் கடத்தப்பட்டதாக பத்மராஜன் தெரிவிக்கிறார்.
இப்படியாக இந்த சுயேச்சை வேட்பாளர்கள் விநோதமாக எதையாவது செய்து மக்கள் கவனத்தை ஈர்ப்பார்கள். ஆனாலும் பொய்யையும் புரட்டையும் உண்மை போல் கூறி வாக்கு சேகரிக்கும் மைய நீரோட்ட அரசியல் வேட்பாளர்களை விட இவர்கள் எவ்வளவோ தேவலாம் என்று மக்கள் தொகுதியில் ஒருசாரார் சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிப்பதும் நடந்து வரும் நடைமுறைதான்.