Last Updated : 11 Mar, 2019 09:35 AM

 

Published : 11 Mar 2019 09:35 AM
Last Updated : 11 Mar 2019 09:35 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் சாமந்திப் பூக்கள்: அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு கணிசமான லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட வட்டங்களில் மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை சாமந்திப் பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட சாமந்தி செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. இதனால் வயல் வெளிகள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து, பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விநாயகம் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 65 ஏக்கருக்கும் மேல் சாமந்திப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பொன்னேரி வட்டத்தில், பஞ்செட்டி உள்ளிட்ட கிராமங்களில் 10 ஏக்கருக்கு மேல் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இருந்து, சாமந்தி நாற்றுகளை வாங்கி வந்து பயிரிட்டுள்ளோம். ஒரு ஏக்கருக்கு நாற்று செலவு, இடு பொருள் செலவு உள்ளிட்ட பராமரிப்பு செலவு என, ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது.

தற்போது, சாமந்திப் பூக்கள் பூத்துக் குலுங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூக்களை ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விட்டு, பறித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை பூக்களைப் பறிக்கிறோம். அறுவடையின் முடிவில், ஏக்கருக்கு 6 டன்னுக்கு மேல் சாமந்திப் பூக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இப்பூக்களை, மின்சார ரயில்கள், பஸ்கள் மூலம் சென்னை-பாரிமுனை, கோயம்பேடு சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். தற்போது கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர். சாகுபடி முடிவடைய இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் கொள்முதல் விலை மேலும் அதிகரித்து, ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x