

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 13-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சிபிஐ நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், மற்ற பெண்களைப் புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.