

தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சாலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை காரணம் காட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 15 சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 7 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் மாற்றியமைக் கப்பட்டு வருகிறது. அதன்படி பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்கு நேரி, எட்டூர் வட்டம், பாலைபுத் தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, வாகை குளம், ஆத்தூர், பட்டறை பெரும்பு தூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சாலைகளின் தூரம், வசதிகளுக்கு ஏற்ற வாறு கட்டணம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்றனர்.
ஒப்பந்தகாலம் முடிந்தும்..
தமிழ்நாடு லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலைகளை பராமரிக்க ஆண்டுதோறும் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த் தப்படுகிறது. ஆனால், சாலைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட 7 சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. அதன்பிறகு 40 சதவீத கட்டணமே வசூலிக்க வேண்டும் என விதி இருக்கிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமல்படுத்தவில்லை.
பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடியில் 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதாக 2009-ல் அறிவிக் கப்பட்டது. இதற்காக பணி நடப்ப தாக கூறி சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இன் னும் பணிகளே தொடங்கவில்லை. நெடுஞ்சாலைகளின் விதிப்படி, சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. குடிநீர், கழிப்பறை, போதிய அளவில் சர்வீஸ் சாலை கள், மின்விளக்குகள் இல்லாமல் இருக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்’’ என்றார்.