

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலைகளுக்காக சென்ற தமிழர்கள், இங்கிருந்து தங்களுடன் எடுத்துச் சென்ற புராதனக் கலை கூத்து நிகழ்ச்சியான ‘காமன் கூத்தை’ அங்கும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினர். அவர்களில் பெரும்பாலானோர் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். தங்கள் மண்ணை விட்டபோதும், தங்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளனர் இம்மக்கள்.
ஆமைக்குளம் கிராமத்தில் 28 ஆண்டுகளாய்...
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் கடந்த 2 8 ஆண்டுகளாக தாயகம் திரும்பிய மக்கள் `காமன் கூத்தை` தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
காமன் கூத்து கதையில் வரும் கதாபாத்திரங்களாக நடிக்கும் கலைஞர்கள், விரதமிருந்து, கூத்து நடைபெறும் இடத்தில் கம்பம் நட்டு, அதிலிருந்து 18 நாட்கள் கழிந்து, மாசி மாதத்தில் வரும் மூன்றாம் தேய்பிறை நாளில் இந்தக் கூத்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர். புராதனக் கூத்து நிகழ்ச்சி மாலை தொடங்கி, விடிய விடிய நடைபெறுகிறது. இந்த கூத்தைக் காண கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரளுகின்றனர். கூத்தில் கதை தொடங்கும்போது, அதில் மூழ்கிப் போகின்றனர் பொதுமக்கள்.
தட்சன் வேண்டுகோள்!
சிவனின் மனைவியாகிய பார்வதியின் தந்தை தட்சன். சிவன் மீது கோபம் கொண்டிருந்த தட்சன், தான் நடத்தும் யாகத்துக்கு சிவனை அழைக்காததால், தந்தை மீது கோபம் கொண்டார் பார்வதி. யாகத்துக்கு சிவனை அழைத்தால் மட்டுமே தான் வரமுடியும் என்று தந்தையிடம் கூறிவிடுகிறாள்.
இந்த நிலையில், சிவன் தவத்தில் ஆழ்ந்து விடுகிறார். மகளின் வேண்டுதலை ஏற்று சிவனை அழைக்க முடிவு செய்கிறார் தட்சன்.
ஆனால், சிவனின் தவத்தைக் கலைத்தால், நெற்றிக்கண்ணை திறந்து தவத்தைக் கலைத்தவர்களை எரித்து விடுவார் என்பது தட்சனுக்குத் தெரியும். எனவே, தான் நேரில் செல்லாமல், வேறு ஒருவரை அனுப்பி, சிவனின் தவத்தைக் கலைக்க முடிவு செய்கிறார். இதற்காக மன்மதனை தேர்வு செய்து விடுகிறார். அதே நாளில், மன்மதன்-ரதி இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது.
நெறிக்கண்ணால் எரிந்த மன்மதன்!
திருமணம் முடிந்த கையுடன், சிவனின் தவத்தைக் கலைக்கச் செல்லுமாறு மன்மதனிடம் கூறுகிறார் தட்சன். இதையறிந்த ரதி, தனது கணவரை எச்சரிக்கிறார். ரதியின் எச்சரிக்கையையும் மீறி, தட்சனின் வேண்டுகோளை ஏற்று, கரும்பு வில்லுடன் சிவனின் தவத்தைக் கலைக்க சென்றார் மன்மதன். தவத்தைக் கலைக்க முயலும்போது, சிவனின் கோபத்துக்கு உள்ளாகி, நெற்றிக்கண் நெருப்பில் எரிந்து சாம்பலாகிறார் மன்மதன். பின்னர் ரதி, சிவனிடம் உயிர்ப்பிச்சை கேட்டு, மன்மதனின் தவறை மன்னித்து, அவரைப் உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள்.
இந்தப் புராதனக் கூத்தை கதையாக சித்தரித்து, மக்கள் மத்தியில் கூத்து நடத்துகின்றநர் கலைஞர்கள்.
18 நாட்களும் விரதமிருந்து இந்தக் கூத்து நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கின்றனர்.
விடிய விடிய கூத்து...
ரதி, மன்மதன் திருமணத்தில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியும், கதை, பாடல்களுடனும், பறை இசையுடனும் இரவு முழுவதும் நடைபெறுகிறது.
திருமணம், சிவனின் யாகம், மன்மதன்-ரதி இடையே நடைபெறும் தர்க்கம், சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதன் கரும்பு வில்லால் அம்பு விடுதல், சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், வேடமணிந்த கலைஞர்கள் தத்ரூபமாய் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.
கூத்தின் இடையே காலன், தூதன், எமன் என வேடம் கட்டி வரும் கலைஞர்கள், பார்ப்பவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துகின்றனர். விடியும் நேரத்தில் சிவன் மன்மதனை நெற்றிக்கண்னை திறந்து எரிக்கும் காட்சியாக, கம்பத்தைச் சுற்றி அடுக்கப்பட்டிருக்கும் விறகுச் சுள்ளிகளை எரிக்கின்றனர். இதற்கு சொக்கப்பனை எனவும் பெயரிட்டு அழைக்கின்றனர்.
கூத்தைக் காணத் திரண்டு, இரவு முழுவதும் விழித்திருக்கும் மக்கள், தாங்கள் கொண்டு வந்திருக்கும் உப்பை சொக்கப்பனை மீது தூவி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இத்துடன் கூத்து நிறைவடைகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள், இந்தக் கூத்தை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த புராதனக் கூத்து நிகழ்ச்சி, தங்கள் அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம்.