அதிமுக ஆட்சி தொடர்வதற்காகவே வாக்கு அடிப்படையில் பாமகவுடன் கூட்டணி: கருணாஸ் எம்எல்ஏ கருத்து

அதிமுக ஆட்சி தொடர்வதற்காகவே வாக்கு அடிப்படையில் பாமகவுடன் கூட்டணி: கருணாஸ் எம்எல்ஏ கருத்து
Updated on
1 min read

தற்போதைய ஆட்சி தொடர வெற்றி தேவை என்பதாலேயே, வாக்குகள் அடிப்படையில் பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என்று, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிமுக அரசு தொடர 7 இடங்களில் வெற்றி தேவை. அதன் காரணமாகவே, பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியும் எங்களிடம் கூட்டணிக்கு பேசவில்லை.

27 சதவீதத்தைவிட குறைவாக உள்ள சமுதாய கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும்போது, எங்களுக்கு வாய்ப்பு அளிக்காதது வேதனை அளிக்கிறது. சசிகலா கட்சிப் பணியில் இருந்திருந்தால் என்னையும், எம்எல்ஏ தமீமுன் அன்சாரியையும் அழைத்துப் பேசி வாய்ப்பு அளித்திருப்பார்.

இருண்ட தமிழகத்துக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற பார்வையில் கமல் வந்துள்ளார். அதனாலேயே அவருக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது. யாரும், யாரையும் சாதாரணமாக எடைபோடக் கூடாது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. கஜா புயலுக்கு வருத்தம் தெரிவித்துகூட பிரதமர் அறிக்கை வெளியிடவில்லை. பேரறிவாளன் உட்பட 7 பேர் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in