Published : 21 Mar 2019 11:48 AM
Last Updated : 21 Mar 2019 11:48 AM

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், இன்று (வியாழக்கிழமை) காலையில் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்புக்கு முதல்வர் பழனிசமை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி:

‘‘கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன். சூலூர் எம்எல்ஏவாக திறம்பட பணியாற்றிய கனகராஜ் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மக்களின் நலன்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்டவர். தொகுதி மக்களிடம் நெருங்கிய நட்பு கொண்டவர். அனைவரிடமும்  விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். தொகுதி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டவர். தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். கனகராஜின் மறைவு கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக சூலூர் தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும்.

கனகராஜை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனகராஜின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை  பிரார்த்திக்கிறேன்’’

அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தி

‘‘சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மனவேதனையும் அடைந்தோம். கனகராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனது திருவடி நிழலில் அமைதி பெற் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’’

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

‘‘சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலையில் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’

ராமதாஸ், நிறுவனர், பாமக

‘‘கோவை மாவட்டம் சூலூர்  தொகுதி எம்எல்ஏவும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கனகராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனகராஜ், அத்தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார். மனதில் உள்ளதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். இதற்கு முன் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி மக்களிடம் பாராட்டு பெற்றவர் கனகராஜ். கனகராஜின் மறைவு சூலூர் தொகுதி மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’

விஜயகாந்த், தலைவர், தேமுதிக

"கனகராஜ் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் அதிமுகவின் நம்பிக்கைக்குரியவராகவும், தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அதிமுக நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.   அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர்

‘‘கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,  அவரது பிரிவை தாங்கும் வலிமையை  அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி  தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்’’

எஸ்.பி.வேலுமணி, அமைச்சர், உள்ளாட்சித் துறை

‘‘சூலூர் எம்எல்ஏ கனகராஜ் காலமானார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. என்னுடன் மாவட்டத்திலே இணைந்து பணியாற்றிய கனகராஜின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x