

சேலம் அருகே பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் - பழனியம்மாள் தம்பதியரின் மகள் பூங்கொடி (10). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது.
அதே பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகிலுள்ள ஒரு மரத்தில் ஆடையற்ற உடலுடன் சிறுமியை தூக்கில் தொங்க விட்டு கும்பல் தப்பிச் சென்றது. பரமசிவம் - பழனியம்மாள் தம்பதியர் மகளைத் தேடி அலைந்து வந்த நிலையில், மகளின் உயிரற்ற நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் விசாரணையில், கதவு இல்லாத வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பூங்கொடியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக, அவரது வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருந்த, பாமக பிரமுகர் பூபதி (31), அவரது நண்பர்களான கிரானைட் தொழிலாளி பிரபாகரன் (26), ஆனந்தன் ( 22), லாரி டிரைவர் ஆனந்தபாபு ( 29) மற்றும் பாலகிருஷ்ணன் (28) ஆகிய ஐந்து பேர் மீதும் வாழப்பாடி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர், ஜாமீனில் வேளியே வந்தனர்.
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். சிறுமி என்றும் பாராமல் துடிக்கத் துடிக்க பாலியல் கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பூபதி, ஆனந்தன், ஆனந்தபாபு, பாலகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், இவர்கள் ஐந்து பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதம், அபராதத் தொகை கட்டத்தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.