

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). பாமக திருபுவனம் நகர முன்னாள் செயலாளரான இவர், கடந்த பிப்.5-ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸார் நேற்று சென்னையில் இருந்து திருபுவனத்துக்கு வந்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.