

வடசென்னை மக்களவை மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு தினக்கூலி தொழிலாளர்கள் அதிகளவில் செல்கின்றனர். இதனால் போதிய ஆட்கள் கிடைக்காமல் வியாபாரிகள் புலம்புகின்றனர்.
வடசென்னை மக்களவை தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே நாளில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இந்நிலையில் தேர்தல் பிரச் சாரம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அந்தந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், எந்தக் கட்சிகளையும் சாராதவர் களையும் கட்சி பிரமுகர்கள் அழைத்து செல்கின்றனர். குறிப்பாக காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பிரச்சாரம் அல்லது பொதுகூட்டங்களில் பங்கேற்க கட்டிடத் தொழிலாளர்கள், மளிகை கடைகளில் பணியாற்றுவோர், வீட்டு வேலைக்கு செல்வோர் என தினக்கூலி தொழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.350 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வடசென்னை வியாபாரிகள் சிலர் கூறும் போது, “வடசென்னையில் தொழி லாளர்கள் அதிகமாக வசிக் கிறார்கள். அதிலும், தினக்கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். தற்போது தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளதால், அரசியல் கட்சிகளில் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் அதிகளவில் பிரச்சாரத்துக்குச் செல்கின்றனர். இதனால், கடைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் எங்கள் சொந்த ஊரில் இருந்து ஆட்களை கொண்டுவந்து கடைப் பணிகளை மேற்கொள்கிறோம்’’ என்றனர்.
இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டத்தைக் காட்ட கட்டிடப் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர் என பல்வேறு தரப்பு தொழிலாளர்களையும் அழைத்து செல்கின்றனர்.
இதனால், எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடியும் வரையில் இப்படித்தான் இருக்கும். அதன் பிறகு, பணிகள் வழக்கம்போல் நடக்கும்’’ என்றனர்.