Published : 27 Sep 2014 10:37 AM
Last Updated : 27 Sep 2014 10:37 AM

‘மங்கள்யான்’ வெற்றியில் தமிழகத்தின் மகேந்திரகிரி மையம்!: அடுத்து ஜி.எஸ்.எல்.வி. பயணத்திலும் பங்கு

செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதையை `மங்கள்யான்’ எட்டியுள்ள பெருமிதமான தருணத்தில் அதன் இன்ஜினை வடிவமைத்துக் கொடுத்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி திரவ எரிபொருள் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள், தாங்கள் அடுத்து தயாரித்து அனுப்பியுள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மார்க்-3 இன்ஜின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது அதில் பொருத்தப்பட்ட திரவ அபோஜி இயந்திரம்தான் (எல்.ஏ.எம்). மங்கள்யான் விண்கலம் புவி வட்டப்பாதையைக் கடந்த பின், இந்த இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து 300 நாட்களுக்கு பின், செவ்வாய் கிரக வட்டப்பாதைக்குள் மங்கள்யானை நிலைநிறுத்துவதற்காக எல்.ஏ.எம். இயந்திரம் மீண்டும் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. உண்மையில் இந்த இயந்திரம் மகேந்திரகிரி திரவ எரிபொருள் கட்டுப் பாட்டு மையத்தில்தான் வடிவமைக் கப்பட்டது. மங்கள்யான் வெற்றியின் மூலம் மகேந்திரகிரி மைய விஞ்ஞானிகளும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த கட்டமாக, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஐ.எஸ்.ஆர்.ஓ. விண்ணில் ஏவ உள்ளது. இதில் பொருத்தப்படும் 110 டன் எடையுள்ள எம்.கே.-3 கிரையோஜெனிக் புரொபெல்லர் இயந்திரமும், மகேந்திரகிரியில் தான் வடிவமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தீவிர பரிசோதனைக்குப் பின், இந்த இயந்திரம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

528 நாள் சோதனை

இதுகுறித்து மகேந்திரகிரி மையத்தின் இயக்குநர் டி.கார்த்தி கேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, `மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள எல்.ஏ.எம். இயந்திரத்தை நாங்கள் ஏற்கெனவே வெற்றிடத்தில் வைத்து 528 நாட்கள் கழித்து மீண்டும் இயக்கி சோதனை செய்து பார்த்தோம். வெற்றிகரமாக மோட்டார் இயங்கியது.

528 நாட்கள் கழித்து வெற்றிகரமாக இயங்கியபோது, 300 நாட்கள் கழித்து இயங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என உறுதியாக நம்பினோம். அதன்படியே செவ்வாய் கிரக வட்டப்பாதையில் எல்.ஏ.எம். இயந்திரம் சிறப்பாக இயங்கி வருகிறது.

விண்வெளிக்கு மனிதர்கள்

விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவதன் முன்னோடியாகவே ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ஏவப்படுகிறது. அதற்கான இயந்திரமும் மகேந்திரகிரியில் வடிவமைக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் வீரர்கள் இருக்க மாட்டார்களே தவிர, அவர்கள் பயணிக்கும் விண் ஓடம் உள்ளிட்ட வசதிகள் அதில் இருக்கும்.

விண்ணில் ஏவப்பட்ட பின், பாராசூட்கள் உதவியுடன் மீண்டும் விண் ஓடம் பூமிக்கு திரும்பும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விண்ணில் இருந்து காற்று மண்டலத்துக்குள் அது திரும்ப நுழையும்போது ஏற்படும் வெப்ப உராய்வைத் தடுக்கும் வகை யில் ஐ.எஸ்.ஆர்.ஓ. உருவாக்கி யுள்ள நவீன கார்பன் தகடுகள் அதில் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், அடுத்து மனிதர் களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஐ.எஸ்.ஆர்.ஓ. ஈடுபடும்.

மகேந்திரகிரியின் பங்களிப்பு

செமி கிரையோஜெனிக் இயந்திரங்களை அடுத்து, கிரையோஜெனிக் இயந்திரங்கள் தயாரிப்பிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள மகேந்திரகிரி மையம், தொடர்ந்து அவற்றை ஐ.எஸ்.ஆர்.ஓ.வுக்கு வழங்கி வருகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஜி.எஸ்.எல்.வி.யின் வெற்றியை ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கிறோம்’ என்றார் டி.கார்த்திகேசன்.

உதவி இயக்குநர் ஜே.ஆசிர் பாக்கியராஜ், தலைமை பொது மேலாளர் லூயிஸ் சாம் டைடஸ், உதவி மேலாளர் சுடலைக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x