

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து நாகப்பட்டினத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். வேதாரண்யம் கோடியக்கரை, பழையாறு, கொடியம்பாளையம் உட்பட 54 மீனவக் கிராமங்களிலும் உள்ள மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாகை சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் பால்பண்ணைச்சேரி பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகூர் பட்டிணச்சேரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும், தங்களது படகுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நாகை தபால் அஞ்சல் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயல்பு நிலை திரும்புகிறது…
நேற்று முதல் நாகை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் பல்வேறு நகரங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. வெளி மாவட்டங்களுக்கு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, உரிய பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகை, வேளாங்கண்ணியில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்தன. மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம்பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கப்பட்டன.