Published : 04 Apr 2014 10:28 AM
Last Updated : 04 Apr 2014 10:28 AM

கம்பு பாய்ந்த நிலையில் உயிருக்குப் போராடும் மயில்: நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை

கோவை அருகே உடலில் கம்பு பாய்ந்த நிலையில், உயிருக்குப் போராடி வருகிறது மயில்.

கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் உடலில் கம்பு ஒன்று குத்திய நிலையில் மயில் ஒன்று வலியுடன் சுற்றித் திரிகிறது.

நல்லாம்பாளையம் அருகே உள்ள மணீஸ் நகர் பகுதியில், குடியிருப்புகளும், விவசாய தோட்டங்களும் அதிகளவில் உள்ளன. இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகம்.

இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிபட்ட நிலையில் மயில் ஒன்றை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அடிக்கடி அந்த மயிலின் அலறல் சத்தமும் கேட்டதால், தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இறுதியில் மயிலின் உடலில் நீளமான கம்பு குத்தியிருப்பது தெரியவந்துள்ளது. தினமும் பறக்கமுடியாமல், உயிருக்குப் போராடி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மயில் சுற்றித்திரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசியப் பறவையான மயிலை வேட்டையாட சிலர் இதுபோன்ற செயல்களில் இறங்கியிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

‘தி இந்து’ வாசகர் ஆர்.பிரகாஷ்குமார், மயிலை படம் எடுத்து அனுப்பி இருந்தார்.

மயிலை கொல்வதற்காக விஷமிகள் திட்டமிட்டு இச்செயலைச் செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், இதுபோன்ற புகார் எதுவும் வனத்துறைக்கு வரவில்லை. சம்மந்தப்பட்ட பகுதியில் ஏதேனும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x