

கைது செய்யப்பட்ட இந்திய விமானி விடுவிக்க உத்தரவிட்ட இம்ரான் கானை புகழும் வகையில் ட்வீட் பதிவு செய்த சுப. வீரபாண்டியனுக்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா.
முன்னதாக, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலர், சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டரில், "#அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற #இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?" எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்தூள்ள எச்.ராஜா, "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் ராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலைப் பார்க்காமல் சாதியப் பதிவிட்டவர் தானே இவர்" என பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அமைதி நடவடிக்கையின் காரணமாக விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) வாகா எல்லை வழியாக அபிநந்தன் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்ரான் கான் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலை முதலே சமூக வலைதளங்களில் இம்ரான் கானுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச்.ராஜாவின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.