Last Updated : 19 Mar, 2019 10:45 AM

 

Published : 19 Mar 2019 10:45 AM
Last Updated : 19 Mar 2019 10:45 AM

புதர்களுக்கு மத்தியில் 150 ஆண்டுகளைக் கடந்த கிரேன்!

கால மாற்றத்தால் பழையன  கழிந்து, புதியன புகுந்தாலும், சிதைந்து கிடக்கும் சில  பழமையான பொருட்களே நமக்கு வரலாற்றைத் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சி நகரில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம், 160 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அந்தக் காலத்தில் இது கோவையின் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற ரயில் நிலையமாக இருந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தால் பொள்ளாச்சிக்கு சிறப்பு என்றால், ரயில் நிலையத்துக்குள் போற்றப்படுவது மரத்தாலான சுமை தூக்கி. 156 ஆண்டுகள் பழமையான இந்தக் கிரேன், கனமான தேக்கு மரச் சட்டத்தில், உறுதியான இரும்பு சங்கிலியால் உருவாக்கப்பட்டுள்ளது.

காலத்தின் மாற்றங்களால் கவனிப்பார் இல்லாமல், ரயில் நிலையத்தில் புதர் மண்டிய  பகுதியில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கொங்கு மண்டலத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கோயம்புத்தூர் ஜில்லா விளங்கியது. கோவை நகரப் பகுதியில் உள்ள பஞ்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள், துணிகள் ஆகியவை,  ரயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல,  தென் கொங்கு பகுதியாக விளங்கிய பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் தேயிலை மற்றும் தேக்கு மரங்கள் விளைச்சல் அபரிமிதமாக காணப்பட்டது.  அவற்றை கொச்சின் துறைமுகம் கொண்டுசென்று, கப்பல் மூலம் இங்கிலாந்து நாட்டுக்கு  எடுத்துச்  செல்லத் திட்டமிட்ட பிரிட்டிஷ்காரர்கள், 1850-ல் ரயில் பாதை மூலம் பொள்ளாச்சியை, நாட்டின் பிற நகரங்களுடன் இணைத்தனர்.

தேக்கு மரங்களைக் கையாள...

டாப் சிலிப் மலைப் பகுதியில் இருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களை சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றவும்,  பொள்ளாச்சிக்கு சரக்கு ரயில்களில் வரும் கனமானப் பொருட்களை இறக்கவும் கிரேன் தேவைப்பட்டது. இதற்காக 1863-ல்  மரத்தாலான  கிரேன் உருவாக்கப்பட்டது. மனித சக்தி மூலம் இயக்கப்படும் இந்த கிரேன், வலுவான சங்கிலிகளைக் கொண்டது.

பொள்ளாச்சி ரயில் நிலையம் தொடங்கப்பட்டபோது வழங்கப்பட்ட இந்த கிரேனுக்கு, தற்போது 156 வயதாகிறது. தமிழகத்தில் உள்ள மற்ற ரயில் நிலையங்களில் இதுபோன்ற கிரேன் இல்லை. பொள்ளாச்சியில் மட்டுமே உள்ளது சிறப்புக்குரியது.  சுமார் 110 ஆண்டுகளில் பல்லாயிரம் டன் சரக்குகளை  ரயில்களில் இருந்து இறக்க இது  பயன்படுத்தப்பட்டது. பின்னர், மிகக் கடினமான பொருட்களை இறக்க மட்டுமே இந்த கிரேன் பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய தொழில்நுட்பம் கொண்ட கிரேன்களின் வருகைக்குப் பின்னர், இந்த கிரேன் பயன்பாடு நிறுத்திக்கொள்ளப்பட்டது.

`ராஜராஜன்’ கிரேன்!

இதேபோல, இன்னொரு கிரேனும் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் செயல்பாடின்றிக் கிடக்கிறது. நிலக்கரி இன்ஜினால் இயக்கப்பட்ட ரயில்கள், அதிக எடை கொண்ட தேக்கு மரங்களை ஏற்றிய சரக்குப் பெட்டிகளை  மீட்டர் கேஜ் பாதையில் இழுத்துச் செல்லும்போது அடிக்கடி தடம் புரளும். இந்தப் பெட்டிகளை மீட்க வலுவான கிரேன் தேவைப்பட்டதால், தெற்கு ரயில்வே நிர்வாகம், அதன் தலைமையகத்திலிருந்து ஒரு கிரேனை பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு வழங்கியது.

`ராஜராஜன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த கிரேன், 50 டன் எடையை தூக்கக்கூடியது.  நீராவி இன்ஜினால் இயக்கப்படும் ராஜராஜன் கிரேன்,  தடம் புரண்ட பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மீட்புப் பணிகளை செய்து வந்தது. பொள்ளாச்சி ரயில் பாதையை மீட்டர் கேஜ் பாதையிலிருந்து, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, 2009-ம் ஆண்டில்  ராஜராஜன்  கிரேன்,  ரயில் நிலையத்தில் ஓர் ஓரத்துக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்ஏவி.துரை பாய் கூறும்போது,  “தொழில்நுட்ப வளர்ச்சியால் புதுமைகள் புகுத்தப்பட்டாலும், பழமையை மறக்க கூடாது.   156 ஆண்டு பெருமையை சுமந்து நிற்கும் கிரேன்,  கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல்,  திறந்தவெளியில் புதர்களுக்கு மத்தியில் கிடந்து வீணாகி வருகிறது.

கோவை ரயில் நிலையத்தின் முகப்பில்,  பழமையான  ரயில் இன்ஜினை  காட்சிக்கு வைத்துப் பராமரித்து வருவதுபோல, பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெருமையை உணர்த்தும் கிரேன்களை காட்சிப் பொருளாக வைத்துப் பராமரிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x