

மதுரையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசனை மதுரை விஜய் மக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அதிமுக இங்கு வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.
மதுரை மாவட்டச்செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் களம் இறக்கப்பட்டுள்ளார். தென்மாவட்டத்தில் அதிமுக நிற்கும் சில தொகுதிகளில் மதுரையும் ஒன்று. அதன் பாரம்பரிய தொகுதியான திண்டுக்கல்லில் நிற்கவில்லை.
மதுரையின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரையில் பிரபலமானவர், இலக்கிய உலகில் பலராலும் அறியப்படுபவர் திமுக கூட்டணியின் பலமும் இருப்பதால் அவரது வெற்றி பிரகாசமாக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் S.R.தங்கப்பாண்டி தனது இயக்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன்மூலம் இளைஞர்களை அதிக அளவில் ரசிகர்களாக கொண்டுள்ள விஜய் ரசிகர்களின் கூடுதல் ஆதரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ளது.
விஜய் ரசிகர் மன்றத்தின் இந்த நிலைப்பாடு மதுரையில் மட்டுமா? அல்லது மாநிலம் முழுதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.