Published : 27 Mar 2019 02:29 PM
Last Updated : 27 Mar 2019 02:29 PM

வேட்புமனு தாக்கல் சுவாரஸ்யங்கள்: ஒரே பெயரில் போட்டி வேட்பாளர்கள்; கடன் வாங்கி மனு தாக்கல் செய்த மநீம வேட்பாளர்

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது. மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக 1,263 பேரும் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களாக 490 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளில் பல தொகுதிகளில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன.

அவற்றின் தொகுப்பு:

கோவையில் மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி, இந்திரா பிரியதர்ஷினி:

கோவையில் சுயேட்சை வேட்பாளர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை வேட்புமனு தாக்கல் செய்தனர். அண்ணனின் பெயர் ராகுல் காந்தி. தங்கையின் பெயர் இந்திரா பிரியதர்ஷினி.

தேர்தல் அதிகாரி ராஜாமணியின் முன்பு  வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்தபோது ராகுல் காந்தியின் மகன் ஜெயந்தன், மனைவி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதற்கு முன்னதாக மேயர் தேர்தலிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதாகக் கூறினார்.

ரூ.300 கடன் வாங்கிய மநீம வேட்பாளர்:

தென்காசி (தனி) தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும் மாற்று வேட்பாளரும் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் முதலில் மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் டெபாசிட் தொகையாக ரூ.12,200 கொடுக்க டெபாசிட் தொகை 12,500 என தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரபூர்வ வேட்பாளர் முனீஸ்வரனிடம் ரூ.300 கடன் வாங்கி மனு தாக்கல் செய்தார். ஆனால், முனீஸ்வரனுக்கு ரூ.300 குறைந்துபோகவே அருகிலிருந்தவர்களிடம் கடன் வாங்கி தொகையை செலுத்தினார். வேட்புமனுவை முற்றிலுமாக நிரப்பாமல் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டு வந்தார்.

தென்காசியில் பெயர் குழப்பம்:

தென்காசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதே பெயரில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தனுஷ்எம்.குமார், தனுஷ்கோடி ஆகிய பெயர்களில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் எஸ்.பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் இத்தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ள சூழலில் ஜி.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என்ற பெயர்களில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சுயேட்சை வேட்பாளர்கள். பிரதான கட்சி வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சைகள் களமிறக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ரீசார்ஜ் செய்துவிட்டு பேசுங்கள்..

தனது தொலைபேசி நாட் ரீச்சபிளில் இருப்பதாக கிண்டல் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். செல்போனில் பேச வேண்டும் என்றால் ரீசார்ஜ் செய்ய வேண்டும். விஜயபாஸ்கர் ரீசார்ஜ் செய்துவிட்டு பேசினால் நான் ரீச்சபிளாக இருப்பேன் என கிண்டல் பேசியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x