Published : 19 Mar 2019 10:38 AM
Last Updated : 19 Mar 2019 10:38 AM

வாசிப்பை நேசிக்கும் மு.வேலாயுதம்!- இலக்கியவாதிகளை கொண்டாடும் `விஜயா பதிப்பகம்’

ஒவ்வொரு சாதனையாளருக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். நான் சொல்கிறேன், வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு புத்தகம் இருக்கிறது. மலை உச்சி மீது ஏறி, டமாரம் அடித்து இதை உரக்கச் சொல்வேன்” என்கிறார் வாசிப்பை நேசிக்கும் `விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம். இலக்கியவாதிகளையும், வாசகர்களையும் கொண்டாடுவதில் இவருக்கு நிகர் இவர்தான். வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் புத்தகத்தை சேர்க்கச் செய்த பெருமைக்குரியவர் இவர்.

தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், ஏன், புத்தகங்களை நேசிக்கும் அனைவருக்குமே விஜயா பதிப்பகம் வேலாயுதம் என்ற பெயர் பரிச்சயமானது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இவரை அறியாத தமிழார்வலர்கள் இல்லை எனலாம்.

கோவை டவுன்ஹால் ராஜ வீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில், புத்தகங்களுக்கு நடுவில், வாசகர்களோடு உரையாடிக் கொண்டிருந்த மு.வேலாயுதத்தை சந்தித்தோம். வயது 79-ஐ தொட்டிருந்தாலும், மலர்ந்த முகத்துடனும், சின்னக் குழந்தைபோல சிரிப்புடனும் பேசத் தொடங்கினார்.

 “பூர்வீகம் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஆட்டுக்குளம்ங்கற சின்ன கிராமம். அப்பா முத்தையா, அம்மா சவுந்திரம். விவசாயக் குடும்பம். ஆனா, வானம் பாத்த பூமிங்கறதுனால விவசாயம் பெரிசா இல்ல. நாங்க 6 குழந்தைங்க.

சுந்தரேஸ்வரா வித்யா சாலா பள்ளியில 8-ம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்குமேல படிக்க வைக்க அப்பாவுக்கு வசதியில்லை. 1954-ல மணப்பாறையில ஒரு ஜவுளிக் கடையில வேலைக்கு சேர்ந்தேன்.

தொடங்கியது புத்தக வாசிப்பு...

படிக்கும்போது, வீட்டுல இருந்து பள்ளிக்கூடத்துக்கு ரெண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்துதான் போவோம். அப்ப பேருந்து வசதி கிடையாது. மாட்டு வண்டி, சைக்கிள்தான் போக்குவரத்துக்கு உதவும். அந்த சமயத்துல, அம்புலிமாமா, மத்தாப்பு, மிட்டாய், கணணன், ஜில் ஜில், டிங் டாங்னு நெறைய குழந்தைங்க புத்தகங்கள் வரும். தின்பண்டம் வாங்கக் கொடுக்கற காசை சேத்தி வெச்சி, புத்தகங்களை வாங்குவேன். நானும், நண்பர்களும் பள்ளிக்குப் போகும்போதும், திரும்பி வரும்போதும் இந்தப் புத்தகங்களை படிச்சிக்கிட்டே போவோம். ஒருத்தரு படிக்க, மத்தவங்க கதை கேட்டுக்கிட்டே நடப்போம். இதுதான், என்னோட முதல் வாசிப்பு.

மணப்பாறையில ஜவுளிக் கடையில சேர்ந்தப்ப, ஓய்வு நேரத்துல குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். அதுல, ஓரணா, ரெண்டனா கிடைக்கும். மாசத்துக்கு ஒருமுறை லிஃப்கோ புத்தக நிறுவனத்தோட வேன் வரும்.

நான் வேலை செஞ்ச ஜவுளிக் கடைக்கு முன்னாடி அந்த வேன் நிக்கும். முதல் ஆளா நான் ஏறி, சங்கர்லால் துப்பறியும் நாவல்கள் வாங்குவேன். அப்ப விலை ரூ.1, ரூ.1.15 இருக்கும். புத்தகத்தை வாங்குவதைத் தவிர வேற எந்த செலவும் செய்ய மாட்டேன்.

மேதாவி, சிரஞ்சீவினு நிறைய நாவல்கள் படிச்சேன். அடுத்த மாதம் லிஃப்கோ வேன் வர்ற வரைக்கும் காசு சேத்து வெச்சி, ஆவலோட காத்திருப்பேன்.

திசை திருப்பிய மு.வ. புத்தகம்!

அந்த சமயத்துல, என்னோட உறவினர் ஒருத்தரு மு.வ. எழுதின `பெற்ற மனம்’ங்கற புத்தகத்தைக் கொடுத்தாரு. தாயைப் பிரிஞ்சி இருக்கற மகன் பத்தின கதை அது. நானும், அம்மாவை பிரிஞ்சி, வேற ஊர்ல தங்கி வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். இந்தக் கதை, என்னோட வாழ்க்கைக்குப் பொருத்தமான கதையா இருந்தது. ரொம்ப பிடிச்சது. துப்பறியும் நாவல்கள்ல இருந்து, சமூக நாவல்களை நோக்கி என்னை திசை திருப்பின புத்தகம் அது. தொடர்ந்து, மு.வ., நா.பா.னு பெரிய எழுத்தாளர்களோட கதைகளைப் படிக்க ஆரம்பிச்சேன்.

ஜவுளிக் கடையில் வேலை...

கோயம்புத்தூர்ல அண்ணன் தேனப்பன் ஒரு ஜவுளிக் கடையில வேலை செஞ்சிக்கிட்டிருந்தாரு. 1957-ல அவரு என்னை ரங்கே கவுடர் வீதியில ஒரு ஜவுளிக் கடையில வேலைக்கு சேர்த்துவிட்டாரு. கடை உரிமையாளர் செல்லப்ப பிள்ளை, மெயில் பத்திரிகை வாங்குவாரு. அவரு படிச்சிட்டு, அதை எனக்குக் கொடுப்பாரு. 8-வது மட்டுமே படிச்சிருந்த எனக்கு, இங்கிலீஷ் படிக்க உதவியாக இருந்தது அந்தப் பத்திரிகை.

1965-ல நண்பர் சபாபதியோட சேர்ந்து, ஒரு பல்பொருள் அங்காடி தொடங்கினோம். நான் வொர்க்கிங் பார்ட்னரா சேர்ந்தேன்.  அந்தக் கடையில ஒரு பகுதியில புத்தகங்களும் விற்கத் தொடங்கினேன். மு.வ., ஜெயகாந்தன், நா.பா. எழுதின புத்தகங்களையெல்லாம் விற்கத் தொடங்கினேன். அப்பவே, மு.மேத்தா, புவியரசு, சிற்பி, வானம்பாடிக் கவிஞர்கள் எல்லாம் கடைக்கு வருவாங்க. இப்படித்தான், இலக்கிய ஆளுமைகளோட என்னோட பழக்கம் தொடங்கியது.

பெயர் வைத்தது எப்படி?

அந்த வருஷம் திருமணம். மனைவி பெரியநாயகி. எங்களுக்கு 3 குழந்தைகள். பெரியவர் டாக்டர் அரவிந்தன். குறிஞ்சி மலர் கதையோட நாயகன் பெயரை அவருக்கு சூட்டினேன். அடுத்தவரு சிதம்பரம், இப்ப விஜயா பதிப்பகத்தைப் பார்த்துக்கறாரு. மகள் விஜயா. பாரதியார் நடத்திய ஒரு பத்திரிகையோட பெயர் விஜயா. அந்தப் பெயரையே மகளுக்கும், நான் புத்தகக் கடை தொடங்கும்போது அந்தக் கடைக்கும் வெச்சேன்.

1976-ல `சிதம்பரம் அண்டு கோ’னு தனியா பல்பொருள் அங்காடி தொடங்கினேன். வியாபாரம் சிறப்பா நடந்தது. ஒருத்தரு கடைக்கு வந்த உடனேயே, அவங்களுக்குத் தேவையான பொருளை கேக்காமலேயே எடுத்து வைப்பேன். ஆச்சரியப்படுவாங்க.  1977 அக்டோபர் 17-ம் இந்த பல்பொருள் அங்காடியிலேயே `விஜயா பதிப்பகம்’னு புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கினேன். ஆரம்பத்துல புத்தகங்கள் விற்பனையில மட்டும் ஈடுபட்டாலும், படிப்படியா புத்தகங்களை பதிப்பிக்கவும் ஆரம்பிச்சோம். நாங்க பதிப்பிச்ச பல புத்தகங்களுக்கு நிறைய பரிசுகள் கிடச்சிருக்கு. எம்ஜிஆர் கையாலேயே பரிசுகளை வாங்கியிருக்கோம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக...

புத்தகங்களையும், வாசகர்களையும் இணைக்க ஒரு நிகழ்ச்சி நடத்தணும்னு தோனுச்சி. 1979-ல வாசகர் திருவிழாவை நடத்தினோம். இந்தியாவிலேயே முதல்முறையாக வாசகர் திருவிழாங்கற பேர்ல, வாசகர்களை இணைத்து விழா நடத்தியது நாங்கதான்.

அதேபோல, பாடப் புத்தகங்கள் இல்லாம, பொது நூல்களை மட்டுமே விற்பனை செஞ்ச முதல் கடையும் எங்களதுதான். பாடப் புத்தகங்கள் இல்லாம புத்தகக் கடையானு நிறைய பேர் ஆச்சரியப்பட்டாங்க. அப்ப, இதை கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. நிறைய பேர் `வேணாம். இது ரொம்ப ரிஸ்க்.  நிச்சயம் வெற்றி கிடைக்காது. பேசாம, பாடப் புத்தகங்களையும் வையுங்க’னு பயமுறுத்தினாங்க. நான் சொன்னேன், ‘கடையோ, நிறுவனமோ தோத்துப்போனா,  நிர்வாகக் கோளாறுனு சொல்லலாம். ஆனா, இந்தக் கடை தோத்துப்போனா, அது நிர்வாகக் கோளாறு இல்ல. சமூகத்துல படிக்கறவங்க, அறிவாளிங்க இல்ல. அதனால புத்தகம் விக்கலைனு பிரகடனம் செஞ்சிட்டு, பல்பொருள் கடையில மட்டும் கவனம் செலுத்துவேன்’னு சொன்னேன்.

ஆனா, புத்தகக் கடைக்கு வெற்றி கிடைச்சது. அறிவாளிகளும், படிப்பாளிகளும் நம்ம சமூகத்துல நிறைய இருக்கறாங்கனு நிரூபணமானது.

திருவிழாவில் புத்தக விற்பனை!

1983-ல டவுன் ஹால் ராஜ வீதியில புத்தகங்களுக்கு மட்டும் தனியா விஜயா பதிப்பகம் கடையைத் தொடங்கினோம். அப்ப இந்தப் பகுதி பெரிய அளவு பிரபலமடையலை. குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது. இப்ப கோவை நகரத்தோட முக்கியமான பகுதியா மாறிடிச்சு.

கொஞ்சம் கொஞ்சமா புத்தக விற்பனை அதிகமாச்சு. நிறைய புத்தகங்களைப் பதிப்பிக்கவும் செஞ்சோம். அதேசமயம், எல்லா பதிப்பகங்களோட புத்தகங்களையும் விற்பனை செய்யத் தொடங்கினோம். எங்கெல்லாம் திருவிழா நடக்குதோ, அங்கெல்லாம் புத்தகங்களை கொண்டுபோய் மக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். பேருந்து நிலையங்கள்ல புத்தக விற்பனை நிலையம் அமைக்க அரசு அனுமதி கொடுத்தது. கொஞ்சம் பதிப்பகங்கள்தான் இதைப் பயன்படுத்துச்சி. கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சினு 8 இடங்கள்ல புத்தக விற்பனை மையத்தை தொடங்கியிருக்கோம். வாய்ப்பு கிடைச்சா, இன்னும் நிறைய இடங்கள்ல தொடங்குவோம்” என்றவரிடம், “புத்தக விற்பனையைத் தாண்டி நிறைய பணிகள்ல ஈடுபட்டீர்களே?” என்றோம்.

“ஆமாங்க. வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இணைப்பு இருக்கணும்னு நெனச்சோம். புத்தக வெளியீட்டு விழா, திறனாய்வுக் கருத்தரங்கம், வாசகர்-படைப்பாளர் சந்திப்புனு நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினோம். விஜயா பதிப்பகத்துல மட்டுமில்லாம, பொது இடங்கள்லயும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினோம்.  அப்துல் ரகுமான், சிவக்குமார், இயக்குநர் பாலச்சந்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி,  லேனா  தமிழ்வாணன், ஜோ டி குரூஸ்னு நிறைய பேர் வாசகர்கள் மத்தியில பேசினாங்க. நிறைய வி.ஐ.பி.ங்க கடைக்கு வந்து, வாசகர்களை சந்திச்சாங்க.

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்!

அமுதசுரபி இதழ்ல மாதம் ஒரு இலக்கியவாதி பத்தி எழுதினேன். அவங்களோட பண்பு, பழக்கம்னு எழுதின இந்தக் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடச்சது. கண்ணதாசன், மு.வ., அழகிரிசாமி, சுஜாதானு 13 பேரோட கட்டுரைகளை தொகுத்து, `இதயம் தொட்ட இலக்கியவாதிகள்’னு ஒரு புத்தகத்தை விரைவில் வெளியிடப்போறேன்” என்றார்.

மு.வேலாயுதத்தின் சேவையைப் பாராட்டி, கவிஞர் கண்ணதாசன் குமுதம் இதழில் எழுதியுள்ளார். அவரது `சந்தித்தேன்...சிந்தித்தேன்...’ புத்தகத்தில் “மிகச் சிறந்த புத்தக வியாபாரியாகத் திகழ்பவர் சிதம்பரம் அண் கோ வேலாயுதம்.

புத்தக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், புத்தகம் எழுதுவோரை விட பொது அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே சான்று’ என்று பாராட்டியுள்ளார். இதேபோல, சுஜாதா கணையாழி, குமுதத்திலும், கோமல் சுவாமிநாதன் சுபமங்களாவிலும், வலம்புரிஜான் தாய் இதழிலும் எழுதியுள்ளனர். இதேபோல, பல எழுத்தாளர்களும் இவரைப் பாராட்டி எழுதியுள்ளனர். பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகள், பரிசுகளை வழங்கியுள்ளன. “இதெல்லாம்விட, வாசகர்களோட பாராட்டுதாங்க முக்கியம். புத்தகக் கடை வாசல்ல செருப்பு கழட்டிவெச்சிட்டு, தரையை தொட்டுக் கும்பிட்டுட்டு உள்ள வந்த வாசகர், `சாப்பிடற ஹோட்டல்ல டிப்ஸ் கொடுக்கிறோம், அறிவுப் பசியைப் போக்குற உங்களுக்கு என்ன கொடுப்பேன்’னு சொல்லி, மீதி சில்லறையை வாங்காமப் போன வாசகர், டேமேஜ் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காம, வேற புது புத்தகத்தை வாங்கின வாசகர்னு பலர் என்னை நெகிழ வெச்சிருக்காங்க. இதுதான் எனக்கு கிடைத்த விருதுங்க. விரும்பிய தொழிலை செய்யறதால, இன்னமும் என்னால் ஓட முடியுது. காலையில 4.30 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரமாவது படிக்கறேன்.

எட்டாவது படிச்ச என்னால, இன்னிக்கு எல்லா அறிஞர்களோடவும், சமமா பேச முடியுது. அதுக்கு காரணம் வாசிப்புதான். உலகத்துல ஏதோ ஒரு மூலையில அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்துக்கும், ஏதோ ஒரு மூலையில வாசகர் காத்திருக்காரு. இளைய தலைமுறை நிறைய படிக்கிறாங்க. இன்னும் படிக்கணும். வாசிப்பு பழக்கம்ங்கறது அலாவுதீன் கையில இருக்கற பூதம் மாதிரி. நாம கேட்டதெல்லாம் அது கொடுக்கும். பிரச்சினைகளை, சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும்.

அப்துல் கலாமின் சந்தேகம்!

1999-ல பிரதமரோட அறிவியல் ஆலோசகரா இருந்த அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம், சென்னை ஹிக்கின் பாதம்ஸ்ல வெளியிட்டப்ப, முதல் பிரதியை நான் பெற்றுக் கொண்டேன். அப்ப அப்துல்கலாம் எங்கிட்ட `ஒரு 10,000 புத்தகம் விக்குமா’னு கேட்டாரு. அப்புறம் அவரு குடியரசுத் தலைவரா உயர்ந்தாரு. அக்னி சிறகுகள் ஒரு லட்சம் புத்தகத்தைத் தாண்டி வித்துடுச்சு. ஒரு விழாவுல என்னைய பாத்தப்ப, ‘இது 10,000 பிரதி போகுமானு கேட்டேன். இப்ப ஒரு லட்சம் பிரதிக்கு மேல போயிடிச்சு. நான் இந்த புத்தகத்தை அண்டர் எஸ்டிமேட் செஞ்சிட்டேன்’னு குழந்தை மாதிரி சொல்லி சிரிச்சாரு. எத்தனையோ நவீனத் தொழில்நுட்பங்கள் வந்தாலும், புத்தக வாசிப்பு அழியாது. இனிப்பு கொஞ்சம் நிறைய சாப்பிட்டால் திகட்டிவிடும். இது மாதிரிதான் செல்போன், லேப்டாப் மூலமான வாசிப்பு. ஆனால், என்னிக்கும் திகட்டாதது புத்தக வாசிப்பு” என்று  நெகிழ்வுடன் கூறி விடை கொடுத்தார் வேலாயுதம்.

ஆதியூர் அவதானி சரிதம்!

1875-ல் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் வித்துவான் சேஷையங்கார் `ஆதியூர் அவதானி சரிதம்` என்ற நாவலை எழுதினார். பாரதிக்கு முன்பே பல்வேறு சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை, `நவீனமாகவியற்றிய கட்டுரைக்கதை’ என்று குறிப்பிட்டிருந்தார். அம்மானை என்ற இலகுவான பாடல் வடிவில் இது அமைந்திருந்தது. மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல்தான், தமிழில் வெளிவந்த முதல் நாவல் என மதிப்பிடுகிறோம். அது வெளிவந்தது 1879-ல். அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆதியூர்  அவதானி சரிதம் வெளியாகிவிட்டது. அண்ணாவின் நண்பரான சிட்டி (எ) பெ.கோ.சுந்தரராஜன் முயற்சியில் இந்த நாவல் மீட்கப்பட்டு, மறுபதிப்புக்கு கொண்டுவரப்பட்டது. கோவை விஜயா பதிப்பகம் இந்த நாவலை மறுபதிப்பு செய்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கப்பட்டது.

`சாகித்ய அகாடமி’ எழுத்தாளர்களுக்கு பாராட்டு...

எழுத்தாளர்களுக்கு எப்போதும் பணம் ஒரு பொருட்டல்ல. அங்கீகாரமும், அடையாளமும்தான் அவர்களுக்கு முக்கியமானவை. அந்த வகையில், சாகித்ய அகாடமி பெற்ற எழுத்தாளர்களுக்கு, விஜயா பதிப்பகம் ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தி வருகிறது. “நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன், தோப்பில் முகமது மீரான், சா.கந்தசாமி, அப்துல் ரகுமான், சி.எஸ்.செல்லப்பா, சிற்பி பாலசுப்பிரமணியம், வைரமுத்து, தமிழன்பன்,  ஜி.திலகவதி, மு.மேத்தா, நீல பத்மநாபன், மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, நாஞ்சில்நாடன், சு.வெங்கடேசன், டி.செல்வராஜ், ஜோ டி குரூஸ், பொன்மணி, ஏ.மாதவன், லஷ்மி சரவணா, வண்ணதாசன், இன்குலாப், எஸ்.ராமகிருஷ்ணன்னு சாகித்ய அகாடமி விருது பெற்றவங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தி, கௌரவிக்கிறோம். நாமளே எழுத்தாளர்களைக் கொண்டாடலைனா, வேறு யாருங்க கொண்டாடுவாங்க. நான் மட்டும் இல்லீங்க, படைப்பாளிகளை, எழுத்தாளர்களை தமிழர்கள் கொண்டாடிக்கிட்டுத்தான் இருக்காங்க. இது நம்ம கடமைங்க” என்கிறார் வேலாயுதம் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x