

அமமுகவுக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட பண்ருட்டி வேல்முருகன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது கட்சியின் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இந்த தேர்தலில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பாமகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேல்முருகன் ஆரம்பத்தில் அமமுகவுடன் இணைவார் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
இந்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயம் வந்த அவர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் திமுக கூட்டணிக்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி வேல்முருகன் கூறியதாவது:
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொண்டேன். மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தை பாலைவனமாக்கி விட்டது. மோடி சொல்வதை செய்வதற்கு, தோப்புக்கரணம் போட்டு காத்திருக்கின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இந்த அரசு நாடகமாடுகிறது.
தமிழக மக்களை, விவசாயிகளை பெரிதும் பாதித்த 8 வழிசாலை விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது இந்த அரசு. 8 வழிச்சாலைக்காக வழக்குபோட்டது அன்புமணிதானே ?. இப்போது அந்த மக்கள் என்ன நினைப்பார்கள்
ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்களுக்கே வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசு பொது நிறுவனங்களில் தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பாஜக சார்பில் ஒரு எம்.பி கூட தமிழகத்தில் வெற்றிபெற கூடாது. அதற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.