Published : 21 Mar 2019 07:20 PM
Last Updated : 21 Mar 2019 07:20 PM

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பொம்மி (20). கர்ப்பிணியான பொம்மி முதல் பிரசவம் என்பதால் பிரசவத்துக்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்த்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொம்மி அங்கு அனுமதிக்கப்பட்டார். சுகாதார நிலையத்தில் அந்நேரம் மருத்துவர் இல்லை. பணியில் இருந்த செவிலியர் அவருக்குப் பிரசவம் பார்த்துள்ளார்.

சுகப்பிரசவம் ஆனபோதும் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்த போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்தது. குழந்தையின் உடல் பகுதி பொம்மியின் வயிற்றிலேயே சிக்கியது.

இதைத்தொடர்ந்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொம்மிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையின் உடல் பகுதி அகற்றப்பட்டது. இது தமிழகத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

செவிலியரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவர் பணியில் இல்லாதது மற்றும் தவறான சிகிச்சை காரணமாக குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது குறித்து குறித்து பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவி மீனாகுமாரி தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x