

தேர்தல் பாதுகாப்பு பார்வையாளராக வடமாநிலத்திலிருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரி மதுபோதையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நடப்பதை ஒட்டி தமிழகம் முழுதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர் மற்றும் பாதுகாப்புக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநிலத்திலிருந்து ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹரியானாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் ஹல்க் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி அலுவலகம் எதிரே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். இன்று காலை வெளியில் வந்த அவர் அங்கிருந்த பாதுகாவலரின் துப்பாக்கியை கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் அந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 9 முறை சுட்டார். பின்னர் அவரது அறைக்கு துப்பாக்கியை எடுத்துச் சென்றுவிட்டார். இந்தச்சத்தம் அருகிலிருந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கும் கேட்டது.
உடனடியாக வெளியில் வந்த அவர்கள் இதுகுறித்து சுற்றுலா மாளிகையில் வந்து காவலரை விசாரித்தனர். அவர் ஐபிஎஸ் அதிகாரி தனது துப்பாக்கியை வாங்கி வானத்தில் சுட்டுவிட்டு அவரது அறைக்கு எடுத்துச் சென்றுவிட்டார் என்று தெரிவித்தார்.
அவரை ஆட்சியர் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் தேர்தல் பார்வையாளர் ஹேமந்த் ஹல்க் குடிபோதையில் இருந்ததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரியின் இந்த செயலை அடுத்து அவர் விடுவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். அவரை விடுவித்து அவரது மாநிலத்துக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.