Published : 24 Mar 2019 09:35 PM
Last Updated : 24 Mar 2019 09:35 PM
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டணியை காங்கிரஸ் அமைத்து ஆட்சியமைக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்புவோம். தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களைக் கூட வெல்லாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரத் தொடக்க நிகழ்வில் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கனகசெட்டிக்குளத்தில் விநாயகர் கோயிலில் பூஜை செய்து பிரச்சாரத்தை காங்கிரஸ் இன்று தொடங்கியது.
அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''மக்களை வேதனையில் ஆழ்த்தியதுதான் மோடியின் சாதனை. மோடியின் ஆட்சிக்கு தரும் மதிப்பெண் பூஜ்ஜியம் தான். தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானாவில் உள்ள 135 தொகுதிகளில் பத்து இடங்களைக் கூட பாஜக வெல்லாது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தனியாகவே வலுவாக உள்ளது. பிஹார், மகாராஷ்டிரம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வலுவான கூட்டணியுடன் காங்கிரஸ் போட்டியிடுகிறது. உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே காங்கிரஸுக்கு கூட்டணி இல்லை. டெல்லியில் கூட்டணி அமைய உள்ளது. இதர மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய கூட்டணியை காங்கிரஸ் அமைத்து மோடியை வீட்டுக்கு அனுப்புவோம். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவது உறுதி''.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
முன்னதாக, வேட்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், "எனக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு மரண அடி. அதேநேரத்தில் ஒவ்வொரு வாக்கும் ராகுலை அரியணையில் ஏற்றும்படி. ஜிஎஸ்டி, உயர் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டதை மறந்துவிடாதீர்கள்" என்று குறிப்பிட்டார்.
மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசுகையில், " ரங்கசாமி ஐந்து ஆண்டுகளாக மாநில அந்தஸ்து பெற முயற்சிக்காமல் தற்போது பெறுவேன் என்பது நியாயமில்லை. இளைஞருக்கு மக்களவைத்தேர்தலில் வழிவிடுவதாக கூறும் ரங்கசாமி, சட்டப்பேரவை தேர்தலிலும் இதை தொடர்வாரா என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்வில் திமுக சார்பில் சிவா, சிபிஐ சார்பில் விஸ்வநாதன், சிபிஎம் சார்பில் முருகன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேவபொழிலன் ஆகியோர் பேசினர்.
எரியாத தெருவிளக்குகள்: பிரச்சாரம் தொடங்கிய இடத்தில் இருந்து உயர் மின்அழுத்த கோபுர விளக்குகளும், தெருவிளக்குகளும் எரியாமல் இருண்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT