Published : 28 Mar 2019 10:50 AM
Last Updated : 28 Mar 2019 10:50 AM

சேற்றை வாரி தூற்றி வருகிறார் ராமதாஸ்: சிதம்பரம் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பதில் பேச்சு

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியது:

என்னை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறிய ராமதாஸ், திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போக கூடியது. ஆகவே திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் உதாசீனப்படுத்தினேன். அன்றிலிருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றி வருகிறார்.

ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன். திமுகவில் சீட்டு மட்டும்தான் கிடைக்கும்; நோட்டு கிடைக்காது என்று எண்ணி, சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு உருவான கொள்கை ரீதியான கூட்டணி இது.

நம்மிடம் ஒரே குரல் தான் ஒலிக்க வேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதுதான்.

மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பிஜேபி அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு குறு தொழில்கள் அழிந்து விட்டன. விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வெளிநாடு சென்று வருகிறார். கார்ப்பரேட் பிரதமராகவே உள்ளார். இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. ஜாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார்.

இந்தத் தேர்தலில் மதவாதமா, ஜனநாயகமா என்று முடிவு செய்ய வேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்க வேண்டாம். எக்காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பாஜகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது என்றார்.

இக்கூட்டத்தில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மாமல்லன், முத்துபெருமாள். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி மணிவாசகம், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, தவாக கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மனிதநேய ஜனநாயக கட்சி முகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி முகமது இமான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் புவனகிரி சட்டமன்ற தொகுதி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x