

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய வேட்பாளர் பட்டியல் மற்றும் தமிழக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக உள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதிப்படுத்தும் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முகுல் வாஸ்னிக், சிதம்பரம் மற்றும் மாநிலங்களின் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமாக அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஆலோசனைப்படி விவரம் கேட்டு இறுதிப்படுத்தப்படும். இன்று கூட்டம் முடிந்தவுடன் இன்று இரவே அனைத்து மாநிலங்களின் முதல் பட்டியல் வெளியாகும் என காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் 1. .திருவள்ளூர் – செல்வப்பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார் 2. சிவகங்கை -கார்த்தி சிதம்பரம் அல்லது ஸ்ரீநிதி 3. விருதுநகர் - மாணிக் தாகூர் அல்லது ஈவிகேஎஸ் 4. தேனி - ஜே.எம்.ஆரூண் அல்லது அஸ்லம்பாஷா 5. திருச்சி – திருநாவுக்கரசர் அல்லது லூயிஸ் (அடைக்கலராஜ் மகன்) 6. கரூர் - ஜோதிமணி அல்லது வேறு ஒருவர் மாற்றப்படலாம் 7. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார் அல்லது ஈவிகேஎஸ் 8. ஆரணி - நா.சே.ராமச்சந்திரன் அல்லது விஷ்ணுபிரசாத் 9. கன்னியாகுமரி - ராபர்ட் புரூஸ் அல்லது டென்னிஸ் மகன் என கருத்து காங்கிரஸுக்குள் ஓடுகிறது.
இன்று நடக்கும் கூட்டத்தில் அனைத்தும் உடனுக்குடன் முடியும். அதனால் சாதக பாதகங்கள் பற்றியெல்லாம் அலசப்படாது வெறுமனே டிக் செய்து பட்டியல் அனுப்பப்படும். ஆகவே யாருக்கு சீட்டு, யாருக்கு இல்லை என்பதெல்லாம் தெரியாது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட்டு இல்லை என்றால் தனது ஆதரவாளர் ஒருவருக்கு ப.சிதம்பரம் தொகுதியைக் கேட்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.