

தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள பி.வி. ரமணா, சனிக் கிழமை மாலை பதவியேற்றுக்கொண்டார். பால்வளத் துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து சனிக்கிழமை வெளியான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பால்வளத் துறை அமைச்சராக இருந்த மாதவரம் வி.மூர்த்தியை அமைச்சரவை யில் இருந்து நீக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏவான பி.வி.ரமணாவை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்திருந்தார். இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். முதல்வரின் பரிந்துரையை ஏற்று புதிய அமைச்சர் ரமணாவுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ள பி.வி.ரமணா, சனிக்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ரமணாவுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த பி.வி.ரமணா, கடந்த மே மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சிப் பதவி பறிப்பு
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகப் பணியாற்றி வந்தார். அந்தப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு என செயல்பட்டு வந்த அதிமுக கட்சி அமைப்புகள், இனி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் என செயல்படும். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி (தனி), மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளையும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பூவிருந்தவல்லி (தனி), ஆவடி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கி செயல்படும்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக சிறுனியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக பி.வி.ரமணா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.