ஒரே பயிற்சி வகுப்பில் படித்து, ஒன்றாகத் தேர்வு எழுதி தமிழக அரசுப் பணி பெற்ற தாய், மகள்: சுவாரஸ்ய சம்பவம்

ஒரே பயிற்சி வகுப்பில் படித்து, ஒன்றாகத் தேர்வு எழுதி தமிழக அரசுப் பணி பெற்ற தாய், மகள்: சுவாரஸ்ய சம்பவம்
Updated on
1 min read

47 வயது பெண்ணும், அவரின் 28 வயது மகளும் ஒன்றாக பயிற்சி வகுப்பில் படித்து, ஒன்றாகத் தேர்வு எழுதி, தமிழக அரசுப்பணியில் சேர்ந்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ஏ.ராமச்சந்திரன். இவரின் மனைவி என். சந்திலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ராமச்சந்திரன் காலமானார்.

இந்நிலையில், சாந்தி லட்சுமி, தனது மூத்த மகள் தேன்மொழி(வயது27) உடன் சேர்ந்து அரசுப்பணித் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்ல முடிவு செய்தார். செந்தில்குமார் எனும் ஆசிரியர் அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். அங்கு தாய் சாந்தி லட்சுமியும், மகள் தேன்மொழியும் சேர்ந்து ஒன்றாகப் படித்தனர்.

சமீபத்தில் தமிழக அரசுப்பணி தேர்வானயத்தின் மூலம் குரூப்-4 பிரிவுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கு வயது தடையில்லை. 10-ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால்போதுமானது. இந்த தேர்வில் சாந்திலட்சுமியும், தேன்மொழியும் பங்கேற்று எழுதினார்கள். ஆனால், வியத்தகு வகையில், இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றனர். தாயும், மகளும் ஒரேநேரத்தில் தேர்வு எழுதி அரசுப்பணி கிடைத்ததால், மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.

சுகாதாரத்துறையில் சாந்தி லட்சுமிக்கு பணியிடமும், இந்து அறநிலையத்துறையில் தேன்மொழிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாந்தி லட்சுமி கூறுகையில், " எனது கணவர் இறந்தபின் வீட்டில் தனியாக இருந்தேன். என் மகள் அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்குச் செல்வதைப் பார்த்து அவருடன் நானும் சென்று படித்தேன். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் குரூப்-4 தேர்வுக்கு வயது தடையில்லை, 10ம்வகுப்பு தகுதியிருந்தால் போதும் என்று  பயிற்சி வகுப்பு ஆசிரியர் தெரிவித்தார்.

இதை ஏற்று நானும், என் மகளும் பயிற்சிவகுப்பில் பங்கேற்று,  தேர்வு எழுதினோம். எங்கள் இருவருக்கும் வேலைகிடைத்துவிட்டது. எனக்கு சுகாதாரத்துறையில் பணி கிடைத்துள்ளது, தேனிமாவட்டத்தில் பணியிடம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன். என் மகளுக்கு இந்து அறநிலையத்துறையில் பணி கிடைத்துள்ளது " எனத் தெரிவித்தார்.

தாய்க்கும், மகளுக்கும் பயிற்சி அளித்த பயிற்சி ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், " தனது மகள் தேன்மொழியை சேர்ப்பதற்காக பயிற்சி வகுப்புக்கு சாந்தி லட்சுமி வந்தார். அப்போது, அவரும் தேர்வு எழுதலாம் எனும்விவரத்தை தெரிவி்த்தோம். இதை ஏற்று பயிற்சிவகுப்பில் சேர்ந்து லட்சுமி படித்தார். பயிற்சி வகுப்பில் வயது வித்தியாசமில்லாமல் தாயும், மகளும் சேர்ந்து படித்தனர்.  எந்தவிதமான சந்தேகம் வந்தாலும் தயங்காமல் சாந்தி லட்சுமி கேட்டு தெரிந்து கொள்வார். அவரால் பயிற்சி வகுப்பு வரமுடியாமல் போனால், அவரின் மகள் தேன்மொழி அவருக்கு வீட்டில் கற்றுக்கொடுத்துவிடுவார். இருவருக்கும் அரசுப்பணி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in