Published : 07 Mar 2019 12:15 PM
Last Updated : 07 Mar 2019 12:15 PM

மோடியை விமர்சித்த ஸ்டாலின்: ட்விட்டரில் எச்.ராஜா பதிலடி

அதிமுக - பாஜக கூட்டணிதான் மதவாத சாதியவாத கூட்டணி என மோடியை குறிப்பிட்டு விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.

வரவிருக்கும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி வியூகங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.

அதன்படி, அதிமுக, பாஜக, பாமக கூட்டணி ஒருபுறம் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய கூட்டணி மறுபக்கம் என கூட்டணிக் கணக்குகள் களைகட்டியுள்ளன. தேமுதிகவின் நிலைமட்டும் ஊசலாட்டத்தில் இருக்க கூட்டணி தொடர்பான விமர்சனங்களும் குறைவில்லாமல் அரசியல் களத்தில் எதிரொலிக்கின்றன.

இந்நிலையில், விருதுநகரில் நேற்று (புதன்கிழமை) திமுக தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் மக்களவை தேர்தலோடு மத்திய பாஜக ஆட்சிக்கும் மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

மேலும்  இது தொடர்பாக தனது ட்விட்டரில் "திமுக - காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் மோடி. மோடி அவர்களே! அதிமுக - பாஜக - பாமக கூட்டணிதான் மதவாத -சாதியவாத -சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளையடிப்பது உங்கள் இலட்சியம். உங்களை விரட்டி நாட்டைக் காப்பாற்றுவதே எங்கள் இலட்சியம்!" எனப் பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா, "ஆமாம்  முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. விசிக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x