Published : 11 Mar 2019 08:21 AM
Last Updated : 11 Mar 2019 08:21 AM

கேரளாவில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு கேமரா

கேரள காவல்துறை பல்வேறு புதுமைகளை செய்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக செயற்கை நுண்ணறிவுத்திறன் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா திருவனந்தபுரம் மாநகர சிக்னல்களில் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் செல்வோரையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் இதன் மூலம் அடையாளம் காண முடியும்.

கேரள காவல்துறையானது தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னையும் மேம்படுத்தி வருகிறது. சமூகவலைதளங்களிலும் கேரள போலீஸாருக்கு நல்ல மதிப்பு உண்டு. முகநூலில் ’கேரள போலீஸ்’ என்னும் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். நகைச்சுவையான மீம்ஸ்கள் மூலம் கேரளத்தில் விழிப்புணர்வூட்டும் பணியை முழுநேரமாக மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற காவலர்களை இதற்கென பிரத்யேகமாக நியமித்துள்ளனர். இதேபோல் நாட்டிலேயேமுதல் முறையாக கேரள காவல்துறையில்தான் மனிதஉருவில் அமைக்கப்பட்டுள்ள ரோபோ பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள காவல்துறையில் KP_BOT என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ உதவி ஆய்வாளராக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் பணி அமர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கேரள காவல்துறை அடுத்ததாக புதியமுயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது. அதாவது ’ஏஐ’ எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ சாப்ட்வேரை ஏற்கனவே இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் இணைத்துள்ளனர். இதன்மூலம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் இல்லாமல் செல்பவர்களை அடையாளம் காண முடியும்.

இதற்கான விதையை முதலில் விதைத்தவர் ரோஷி ஜான். டி.சி.எஸ் நிறுவனத்தின் ரோபோடிக் சார்ந்த பிரிவின் உலகளாவியத் தலைவராக இருக்கும் இவர் இதற்கு முன்பு டாடா நானோ காரை டிரைவர் இன்றி ஓட்டிக் காட்டியதில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை அண்மையில் சந்தித்து இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். இதற்கென தனி பிரிவை உருவாக்கினால், இதன் மூலம் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே இந்த செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் பொருத்தப்பட்ட கேமராக்கள் சோதனை முயற்சியாக திருவனந்தபுரத்தில் உள்ள சில சிக்னல்களில் பொருத்தப்பட்டன. இதில் 98 சதவீதம் நல்லபலன் கிடைத்திருப்பதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் ராஜீவ் புத்தலாத் இதுகுறித்து கூறுகையில், ‘’செயற்கை நுண்ணறிவின் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கும் நுட்பம் ஏற்கனவே வயலாறு, வடக்கஞ்சேரி, கோழிக்கோடு பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது. இது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை. இதில் 98 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் செல்பவர்கள் ஆகியோரின் வண்டிப் பதிவு எண்ணை செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேரின் வழிகாட்டுதலின்படி கேமரா, துல்லியமாக படம் எடுத்துவிடும். அதை சம்பந்தப்பட்ட பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி விடுவோம். அவர்களிடம் இருந்து முகவரி பெற்று, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத அறிவிப்பாணை கொடுக்கப்படும். இதன்மூலம் போலீஸார் பார்க்கும்போது மட்டுமே ஹெல்மெட் போடுவதும், சீட்பெல்ட் போடும் பழக்கமும் முடிவுக்கு வந்து எப்போதுமே அவர்கள் சாலை பாதுகாப்பிலும், தங்கள் உயிர் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தும் சூழல் ஏற்படும்” என்றார்.

இந்த சோதனை முயற்சி கொடுத்த வெற்றியால், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த ஆலோசித்து வருகிறது கேரள மாநில அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x