Last Updated : 27 Mar, 2019 09:00 AM

 

Published : 27 Mar 2019 09:00 AM
Last Updated : 27 Mar 2019 09:00 AM

மக்களவை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக  ‘ஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடவடிக்கை

பணப்பட்டுவாடா, வேட்பாளர் களுக்கு பேனர் வைத்தல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பறக்கும் படையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்.18-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறலை கண்காணிக்க பறக்கும் படை, நிலைக்குழு மற்றும் ஒளிப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கோவிந்தராஜூலு தலைமையில், அதிகாரிகள் முருகேசன், ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக இந்த அறை செயல்பட்டு வருகிறது. டேட்டா என்ட்ரி பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தல், வேட்பாளர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்தல், கட்சிக் கொடிகள் கட்டுதல், விதிமீறல் குறித்த புகார்களை 18004257024 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க 'ஜிபிஎஸ்' தொழில்நுட்பம், கட்டுப்பாட்டு அறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் நோடல் அதிகாரியும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான ஆர்.கோவிந்தராஜூலு கூறியதாவது:

தேர்தல் விதிமீறல் குறித்த புகார்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும், புகார் வந்த பகுதிக்கு அருகில் பறக்கும் படை உள்ளதா? என்று ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக டிராக்கிங் செய்யப்பட்டு, அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். பறக்கும் படையினரும் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புவார்கள். விசாரணையின் அடிப்படையில் புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பறக்கும் படையின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். நிலையான குழுவினர் ஒரே இடத்தில் சோதனைச் சாவடி அமைத்து தணிக்கையில் ஈடுபடுவார்கள். ஒளிப்பதிவு குழுவினர் தணிக்கை மற்றும் விதிமீறல்களை பதிவு செய்து, குறுந்தகட்டில் பதிவு செய்து அனுப்புவார்கள். பறக்கும் படை சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x