மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. அத்துடன், மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் இரண்டாண்டு பணி நீட்டிப்பு பெற்றுள்ளார்.

ஆகவே, மக்களவைத் தேர்தலின் போது அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாகச் செயல்படலாம். மேலும், வாக்குக்காக பணம் கொடுப்பதற்காக ஆம்புலன்ஸ்களில் கூட பணம் எடுத்துச் செல்லப்படும் நிலையில், தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க இயலாது.

ஆகவே, மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்படத் தடை விதித்து, வேறொரு நியாயமான அதிகாரியை டிஜிபியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,  எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு மக்களவைத் தேர்தலின் போது டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாகச் செயல்பட நீதிமன்றம் தடை விதிக்க முடியாது.

இந்திய தேர்தல் ஆணையமே அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் மனுவை ஆவணமாகக் கொண்டு அதனைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in