Published : 02 Mar 2019 06:34 PM
Last Updated : 02 Mar 2019 06:34 PM

பெண் துறவிகள் குறித்த சர்ச்சைக்காட்சி: ஹன்சிகா, இயக்குனர் ஜமீல் மீதான புகாரில் என்ன நடவடிக்கை: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இந்து மத நம்பிக்கைகளையும், பெண் துறவிகளையும் அவமதிப்பதான இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல் ஆணையர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மஹா படம் உருவாகி வருகிறது. இதற்கான வெளியிடப்பட்ட மற்றும் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் புனித இடமாக கருதும் காசி நகரின் பிண்ணனியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா கஞ்சாவோ அல்லது புகைப்பிடிப்பது போலவோ இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைபடுத்தும் வகையில் இருப்பதாக ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 21-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார்.

அதில் போஸ்டர் காட்சியை அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், அதில் இடம்பெற்றிருந்த நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித விசாரணை நடத்தவோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்பதால், தன் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாரயணன் அளித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x