Last Updated : 13 Mar, 2019 05:41 PM

 

Published : 13 Mar 2019 05:41 PM
Last Updated : 13 Mar 2019 05:41 PM

தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுவது தமிழக மக்களுக்கான அவமானம்: ராகுல் காந்தி பேட்டி

பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி விரும்பவில்லை என்ற விமர்சனத்துடன் பல முக்கியக் கேள்விகளுக்கு  சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்தார்.

ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெறுகிறது.  மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தமிழகத்தில் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம் இது என்பதால், திமுக கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

பொதுக் கூட்டத்தில் பங்கேற்றதற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

''பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளத் தயங்குகிறார். இங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கின்றன. ஆனால் மோடி சந்திக்க மறுக்கிறார். மோடி ஏன்  மறைந்து இருக்கிறார்....

என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் நிலை அதன் பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது. ஆனால் இந்த அடிப்படையை  பாஜகவும், மோடியும் புரிந்து கொள்ளவில்லை.

நீங்கள் மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் இருந்து திடமான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

எனவே, முதலில் காங்கிரஸ் கட்சி செய்ய இருப்பது இந்த நாட்டின் இயல்புத் தன்மையை மீண்டும் கொண்டு வருவது, இந்த  நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இந்த நாட்டின் அங்கத்தினரே என்று உணர வைக்க வேண்டும்.

 மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும், அவர்களின் கலாச்சாரம் தாக்கப்படுவதாகவும் கருதக் கூடாது.

இந்தியா அனைவருக்குமானது. இரண்டாவது நமக்கு ஜிஎஸ்டியில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் ஜிஎஸ்டியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறோம். எளிமையான ஜிஎஸ்டியை உருவாக்குவோம். இதில் குறைந்த அளவிலான வரியும் சாத்தியமாகும்.

சிறு, நடுத்தர வணிகங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவது நிகழப் போகிறது. இந்த நிறுவனங்களுக்காக நாங்கள் வங்கிகளைத் திறக்க இருக்கிறோம்.

சமீப ஆண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் மோடியின் அரசால் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களது வாழ்வை எளிமையாக்க இருக்கிறோம். இது தொடர்பான பல யோசனைகளை  நாங்கள் வைத்திருக்கிறோம்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியத்துக்கு கீழ் யாரும் இருக்க மாட்டர்கள்.

சீனாவின்  உற்பத்தித் திறனுக்கு போட்டியிடும் திறன் தமிழ் நாட்டுக்கு உள்ளது. 2019 -ல் எங்களுக்கு அதிகாரம் இருந்தால் வேலை வாய்ப்பின் மையமாக தமிழகத்தை உருவாக்குவோம்.

புல்வாமா தாக்குதல்

45 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு எப்போதெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் இதில் கேள்வி என்னவென்றால், அந்த 45 ராணுவ வீரர்களைப் பாதுகாக்க அரசு என செய்தது. புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருக்கும் மசூர் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். இதனை பாஜக விளக்க வேண்டும்.

வேலை வாய்ப்பின்மை

நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை என்பதை அனைவரும் உணர்கிறார்கள். மோடி இதில் தோல்வி அடைந்திருக்கிறார்.

ஆனால் அவர் பொய்யான தகவல்களை கூறிக் கொண்டு இருக்கிறார். உண்மை என்னவென்றால் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உண்டு

அனைத்து மா நிலங்களுக்கும் உரிமை உண்டு. அனைவருக்கு குரல் கொடுக்க உரிமை உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசால் இயக்கப்படுகிறது. இது தமிழக மக்களுக்கான அவமானம். 

நான் தழிழ் மக்களின் உணர்வைப் புரிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள்தான் அவர்கள் மாநிலத்தை ஆள வேண்டும்.

மோடி ஆட்சியில் உச்ச நீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ  என தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன.

விவசாயிகளுக்கான கடன்

நாங்கள் ஆட்சி அமைக்கும்போது,  விவசாயிகளுக்கான தெளிவான கொள்கையை வைத்துள்ளோம். விவசாயம், விவசாயிகள் இல்லாமல் இந்தியா உறுதி பெறாது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், பாஜகவுக்கு இதில் நம்பிக்கை இல்லை. இதுதான் காங்கிரஸுக்கு பாஜகவுக்கும் இடையேயான வேறுபாடு. 

நாங்கள் அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம்.

ஐந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளிடம் மோடி அரசு எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நான் மறக்கவில்லை.

பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு,

மொத்த எதிர்க் கட்சிகளும்  பாஜக, மோடி, ஆர்எஸ்எஸ்ஸூக்கு எதிராக சண்டையிட ஒற்றுமையாக உள்ளன. நாங்கள் பாஜகவை தோற்கடிக்க இருக்கிறோம். பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களது பணி மோடியை தோற்கடிப்பது.

தமிழக மீனவர் பிரச்சனை

இது தொடர்பாக நாங்கள் தெளிவான  தேர்தல் அறிக்கையைக் கொண்டுள்ளோம். மீனவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புள்ள மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்க இருக்கிறோம்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவர் விடுதலையில் நாங்கள் யார் மீது வெறுப்பு கொண்டிருக்கவில்லை.

இது சட்ட ரீதியான பிரச்சினை. சட்டப்படியாக எந்த முடிவு  வந்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருகிறோம். இதனை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரத்திடம் ஆலோசனை செய்த பிறகு பதிலளித்த ராகுல் காந்தி, ''பள்ளிக் கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க  வேண்டும்'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x