

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் சித்ரவதை செய்யப்படவில்லை என அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.ராஜகுமாரி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
“நான் எனது கணவருடன் மதுரையில் வசிக்கிறேன். எனது தாயார் உடுமலைப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் எனது தாயார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். உண்மையான கொலையாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக, அப்பாவியான எனது தாயாரை கைது செய்த உடுமலைப் பேட்டை போலீஸார், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கட் டாயப்படுத்தி எனது தாயாரை சித்ரவதை செய்துள்ளனர்.
எனது தாயாரின் விரல்கள், நகங்களில் ஊசியைக் குத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். எனது தாயாரின் உடைகளை அகற்றி அரை நிர்வாணமாக அவரை தலைகீழாகக் கட்டி தொங்க விட்டுள்ளனர். பாலியல் ரீதியாகவும் எனது தாயார் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்” என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், சித்ர வதைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண்ணை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி மனுதாரரின் தாயாருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உடுமலைப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏ.தவமணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“மனுதாரரின் தாயாரை சட்ட விரோதமாகக் காவலில் அடைத்து வைக்கவில்லை. தான் கொலை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டு உடுமலைப்பேட்டை வி.ஏ.ஓ. முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சரணடைந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியதால் ஏற்பட்ட தகராறால் தான் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. ஒப்படைத்தார். அதன் பிறகு புலன் விசாரணை நடத்தப்பட்டு மனுதாரரின் தாயார் கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையத்துக்கு மனுதாரரின் தாயார் வந்த போது அவரது உடலில் காயங்கள் இருந்தன. அது பற்றி அவரிடம் கேட்டபோது, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தான் மதுபானம் அருந்தியதாகவும், அப்போது போதையில் கீழே விழுந்ததன் காரணமாக காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மை இல்லை
ஆகவே, காவல் நிலையத்தில் மனுதாரரின் தாயாரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை” என அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் அதிகாரி மனுதாரரின் தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ராமசுப்பிர மணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“மனுதாரரின் தாயாருக்கு சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி கூறியுள்ளார். ஆனால் டிஸ்சார்ஜ் செய்யும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மனுதாரரின் தாயாரை மனநல மருத்துவ நிபுணரைக் கொண்டு அவரது மனநிலை பற்றி ஆராய வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரியுள்ளனர். ஆகவே, மனநல மருத்துவரைக் கொண்டு பரிசோதனை நடத்திட வேண்டும்.
மனுதாரரின் தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறதா, ஆம் எனில் எந்த வகையிலான சிகிச்சை போன்றவை தொடர்பாக மருத்துவமனை அதிகாரி மீண்டும் ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் சேர்த்து மனுதாரரர் தாயார் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகள், மனநல மருத்துவ நிபுணரின் அறிக்கை போன்ற வற்றையும் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர் மற்றும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் சகோதரி தவிர வேறு யாரும் மருத்துவமனைக்குள் சென்று அவரை சந்திக்க அனுமதிக்கக் கூடாது.
வழக்கு மீண்டும் செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.