Last Updated : 26 Apr, 2014 09:04 AM

 

Published : 26 Apr 2014 09:04 AM
Last Updated : 26 Apr 2014 09:04 AM

கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்: 7 மாதங்களாக மக்கள் அவதி - 3 ஆண்டுகளாக மேம்பால பணி நிலுவை

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த 7 மாதங்களாக போக்கு வரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வரு கின்றனர்.

கோடம்பாக்கம் மேம்பாலம் வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை ஆகிய பகுதி களை இணைப்பதாக உள்ளதா லும், மீனாட்சி கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழியில் அமைந்திருப்பதாலும், அதிகமான வாகனங்கள் இதை பயன்படுத்த வேண்டியுள்ளது.

1965-ம் ஆண்டு திறக்கப்பட்ட கோடம்பாக்கம் மேம்பாலம் பழுத டைந்துள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என்று நிபுணர் குழு 2011-ம் ஆண்டு அறிவுறுத்தியிருந் தது. அதன்படி இந்தப் பணிகளுக் காக 2011-ம் ஆண்டு முதலே திட்டம் வகுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்த பணிகளுக்காக மாநகராட்சி ரூ.1 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கியது.

பாலம் சீரமைப்பு பணிகளுக்காக தற்போது பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மேலே அனுமதிக்கப்படவில்லை. அவை கோடம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் ஏறிச் செல்லும்படி திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஒரு கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். ஆனால், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

கோடம்பாக்கம் பகுதியில் 3 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் மணிகண்டன் இதுகுறித்து கூறுகை யில், “தி.நகரிலிருந்து இங்கு சவாரி வரவே முடியாது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த பாதைகளில் பேருந்துகளும் செல்வதால் நெரிசலாக உள்ளது. காலை மாலை நேரங்களிலும் குறிப்பாக பள்ளி செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது” என்றார்.

கோடம்பாக்கம் வழித் தடத்தில் தினமும் பயணம் செய்யும் வள்ளி யம்மாள் கூறுகையில், “இன்னும் மேம்பாலப் பணிகள் தொடங்கவே இல்லை. இதை இன்னும் 2 ஆண்டுகளுக்கு இழுத்தடிப்பார்கள் போலத் தெரிகிறது. இதனால் தினமும் வீட்டுக்கு தாமதமாக செல்ல வேண்டியுள்ளது” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த மேம்பாலத்தை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதற்கு, போக்குவரத்து காவல்துறையின் அனுமதி கிடைத்தால்தான் மேம்பாலத்தின் மேற்பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை முடிக்க முடியும். 3 ஆண்டுகளாக முயன்றும் இதுவரை இதற்கு அனுமதி கிடைக்கவேயில்லை. மேம்பாலத்தின் கீழே முடிக்க வேண்டிய பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. மேம்பாலத்தின் மேற்பரப்பில் கான்கிரீட் தரை தளத்தை புதுப்பித்தல், கைப்பிடி வைத்தல், வண்ணம் பூசுதல் ஆகிய பணிகளை முடிக்க வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x