Published : 02 Mar 2019 12:24 PM
Last Updated : 02 Mar 2019 12:24 PM

1971 தேர்தலில் நூலிழையில் வெற்றி கண்ட திமுக

கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

எல்லை பதற்றத்தால் தேர்தல் தள்ளிப்போகாது என்று தலைமைத் தேர்தல் ஆணையமும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் களத்தில்  இன்னமும் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்படியாக, விரைவில் வரவிருக்கும் தேர்தல் எத்தனை சுவாரஸ்யமானதோ அதே அளவு சுவாரஸ்யமானது முந்தைய தேர்தல்களை புரட்டிப் பார்ப்பதும். அப்படியொரு தேர்தல் சுவாரஸ்யம் பற்றியதுதான் இந்தச் செய்தி.

தேசத்தின் 5-வது மக்களவைத் தேர்தல் 1971-ல் மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை நடைபெற்றது.

அந்தத் தேர்தல் பல சுவாரஸ்யங்களை தன்னகத்தே உள்ளடக்கியிருந்தது. இந்திரா காந்திக்கு இது மிக முக்கியமான தேர்தலாக இருந்தது. மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை அந்தத் தேர்தல் காங்கிரஸுக்குத் தந்திருந்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஓரணி இந்திரா காந்தி தலைமையில் ஓரணி என்று காங்கிரஸ் பிரிந்து கிடந்த நேரமது.

1966-ல் பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தால் இமாச்சலப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவானது. இதனால், 1971 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதுமான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 518 எனக் குறைந்திருந்தது. முன்னதாக இது 520-ஆக இருந்தது.

இத்தகைய சூழலில் தேர்தல் வர, தமிழகத்தில் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவுக்கரம் நீட்டியிருந்தது. தமிழகத்தில் திமுக அளித்த பேராதரவு இந்திராவுக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது.

திமுக, காங்கிரஸுடன் இடதுசாரிகளும் கூட்டு சேர்ந்திருந்தனர். 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி கண்டது.

தமிழகத்தில் ராஜாஜியும், காமராஜரும் எதிரணியில் இருந்தனர். நாகர்கோயில் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது.

நூலிழையில் வெற்றி..

நூலிழையில் வெற்றி என்று நாம் பேசியிருப்போம், கேட்டிருப்போம். ஆனால் 1971 நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையிலேயே திமுக அப்படியொரு வெற்றியை சந்தித்தது.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் எம்.எஸ்.சிவசாமி களமிறக்கப்பட்டிருந்தார். ஸ்வதந்திரா கட்சி சார்பில் எம்.மத்தியாஸ் களமிறக்கப்பட்டிருந்தார்.

எம்.எஸ்.சிவசாமி202783 வாக்குகள் பெற்றார். எம்.மத்தியாஸ் 202757 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் வெறு 26 ஓட்டுகள் மட்டுமே.

நூலிழையில் வெற்றி என்ற வார்த்தைக்கு இதுதான் நிஜமான அர்த்தம் என்பதுபோல் அந்த வெற்றி அமைந்தது.

1971 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x