

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கைரேகையை பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ளாத உயர் நீதிமன்றம் வெற்றியை செல்லாது என அறிவித்துள்ளதை அடுத்து, போலி கைரேகையை பதிவு செய்தவர்கள்மீது விசாரணை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஏற்கனவே இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடுத்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸ் அவர்களின் வெற்றியை ரத்து செய்துள்ளார்.
ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக் கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.